மத்திய பிரதேசம்: 3 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்; பேருந்து ஓட்டுனரின் வீடு இடிப்பு
|மத்திய பிரதேச தனியார் பள்ளி 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையில் பேருந்து ஓட்டுனரின் வீடு இடித்து தள்ளப்பட்டது.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 3 வயது சிறுமி நர்சரி வகுப்பு பயின்று வருகிறார். அந்த சிறுமி கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.
பள்ளியில் இருந்து வீடி திரும்பிய சிறுமியின் உடை மாற்றப்பட்டிருந்தது. மாற்று உடையை யாரோ சிறுமிக்கு அணிவித்து அனுப்பியுள்ளனர். இதனால், சந்தேசமடைந்த சிறுமியின் தாயார் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். அப்போது, பள்ளியில் வைத்து சிறுமியின் உடையை யாரும் மாற்றவில்லை என கூறியுள்ளனர்.
அப்போது, சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்துள்ளனர். அதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருந்தன. தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் இது குறித்து சிறுமியிடம் கேட்டுள்ளார். அப்போது, அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
நர்சரி வகுப்பு பயின்று வரும் அந்த சிறுமியை பள்ளி பேருந்து ஓட்டுனர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. சிறுமியை பள்ளி பேருந்தில் வைத்து ஓட்டுனர் பாலியல் வன்கொடுமை செய்ததுள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுனரை கைது செய்தனர். பள்ளி பேருந்தில் வேலை செய்த பெண் ஊழியரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், ஷாபுரா பகுதியில் அமைந்த, பள்ளி பேருந்து ஓட்டுனரின் வீட்டை போலீசாரின் கண்காணிப்பின் கீழ் அதிகாரிகள் இடித்து தள்ளினர். சட்டவிரோத கட்டுமானம் என கூறி அதிகாரிகள் இந்நடவடிக்கையை எடுத்து உள்ளனர்.
இதுபற்றி உள்துறை மந்திரி நரோட்டம் மிஷ்ரா கூறும்போது, குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டு விட்டனர். இந்த அதிர்ச்சிக்குரிய விவகாரம் வெளியே தெரிந்து விடாமல், மூடி மறைப்பதற்கு பள்ளி நிர்வாகம் முயன்றுள்ளது என நான் உறுதியாக நம்புகிறேன். தேவைப்பட்டால் பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்துவார்கள். அவர்களுக்கு எதிராகவும் விசாரணை தொடங்கும் என கூறியுள்ளார்.
இதுபற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹீனா கவாரே கூறும்போது, சிவராஜ் சிங் சவுகான் அரசு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறது. சட்டங்கள் இயற்றுவது மட்டும் உதவாது. அவற்றை முறையாக அமல்படுத்த வேண்டியது அவசியம். இந்த விசயத்தில் ஆளும் அரசு அலட்சியமுடன் உள்ளது. இதனை சட்டசபையில் நாங்கள் எழுப்புவோம் என கூறியுள்ளார்.