கர்நாடகத்தில் இந்த கல்வி ஆண்டிலேயே பாடத்திட்டம் மாற்றப்படும்; மந்திரி மது பங்காரப்பா அறிவிப்பு
|கர்நாடகத்தில் இந்த ஆண்டிலேயே பள்ளி பாடத்திட்டம் மாற்றப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா கூறியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் இந்த ஆண்டிலேயே பள்ளி பாடத்திட்டம் மாற்றப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா கூறியுள்ளார்.
பெரியார், குவெம்பு...
கர்நாடகத்தில் 2019-ம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டில் கடந்த மார்ச் மாதம் வரை பா.ஜனதா ஆட்சி நடைபெற்றது. இந்த ஆட்சி காலத்தில் பள்ளி பாடத்திட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அதாவது சமூக சீர்திருத்தவாதிகள் நாராயணகுரு, பெரியார், தேசியகவி குவெம்பு போன்ற பல்வேறு முற்போக்கு சிந்தனை கொண்ட எழுத்தாளர்களின் பாடங்கள் நீக்கப்பட்டன. அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். நிறுவனத் தலைவர் ஹெக்டேவார், எழுத்தாளர் சக்ரபர்த்தி சூலிபெலே உள்ளிட்ட வலதுசாரி கருத்துகளை கொண்ட எழுத்தாளர்களின் பாடங்கள் புதிதாக சோ்க்கப்பட்டன.
இதற்கு எழுத்தாளர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் புதிதாக சேர்க்கப்பட்ட பாடத்திட்டம் நீக்கப்படும் என்று அக்கட்சி தலைவர்கள் கூறினர். இந்த நிலையில் கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளதால், பா.ஜனதா ஆட்சியில் நீக்கப்பட்ட பாடங்களை மீண்டும் சேர்க்கவும், புதிதாக சேர்க்கப்பட்ட பாடங்களை நீக்கவும் முடிவு செய்துள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பாடத்திட்டம் முக்கியமானது
கர்நாடகத்தில் நடப்பு ஆண்டிலேயே பள்ளி பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. குழந்தைகள் படிக்க தேவை இல்லாத பாடங்களை நீக்க கல்வித்துறை நிபுணர்கள் முடிவு செய்வார்கள். இந்த பாடத்திட்டம் மாற்றம் குறித்து மந்திரிசபை கூட்டத்தில் விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும். இதற்கு முன்பும் புத்தகங்கள் அச்சிட்ட பிறகு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளன. குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாக வேண்டியது இல்லை.
தொடக்கத்தில் சேது பந்து திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. அதனால் குழந்தைகள் பள்ளிகள் திறந்தவுடன் பாடப்புத்தகங்களை படிப்பது இல்லை. குழந்தைகள் என்ன படிக்க வேண்டும், என்ன படிக்கக்கூடாது என்பதை அரசு முடிவு செய்கிறது. இந்த பாடத்திட்ட விஷயம் முக்கியமானது. குழந்தைகளின் நலன் கருதி நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்.
கற்பிக்க மாட்டோம்
குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நல்ல அம்சங்களை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டியுள்ளது. பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் என்று எழுத்தாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்-மந்திரியும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டுகிறார். பாடத்திட்டத்தை மாற்றுவோம் என்று நாங்கள் தேர்தல் அறிக்கையிலும் கூறியுள்ளோம். அதை நாங்கள் செய்கிறோம்.
கல்வித்துறை நிபுணர்கள் ஒரு கட்சிக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள். அதனால் அவர்கள் கூறும் ஆலோசனைகளை நாங்கள் பரிசீலிக்கிறோம். தவறான தகவல்களை கற்பிக்கும் கல்வியை நாம் தடுக்க வேண்டியது அவசியம். அதை நாங்கள் செய்கிறோம். கல்வி நிபுணர்கள் எந்த பாடம் வேண்டாம் என்று சொல்கிறார்களோ, அதை நாங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க மாட்டோம்.
ஆசிரியர்கள் பற்றாக்குறை
ஆசிரியர்கள் நியமனத்தில் 2 பிரச்சினைகள் உள்ளன. சட்ட சிக்கல் உள்ளது. அதுகுறித்து அட்வகேட் ஜெனரலுடன் ஆலோசனை நடத்தப்படும். ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இந்த பிரச்சினைக்கு ஒப்பந்தஆசிரியர்கள் நியமனம் தீர்வாகாது. அதனால் ஆசிரியர்கள் பற்றாக்குறை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
இவ்வாறு மது பங்காரப்பா கூறினார்.