< Back
தேசிய செய்திகள்
எல்.வி.எம்.3-எம்.3 ராக்கெட்டின் தொழில்நுட்பம் ககன்யான் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் - இஸ்ரோ தலைவர் தகவல்
தேசிய செய்திகள்

'எல்.வி.எம்.3-எம்.3' ராக்கெட்டின் தொழில்நுட்பம் ககன்யான் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் - இஸ்ரோ தலைவர் தகவல்

தினத்தந்தி
|
27 March 2023 2:27 AM IST

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு தற்போது வெற்றியடைந்த ‘எல்.வி.எம்.3-எம்.3’ ராக்கெட்டின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கூறினார்.

எங்கள் மேல் நம்பிக்கை

எல்.வி.எம்.3-எம்.3 ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் பேசியதாவது:-

'எல்.வி.எம்.3-எம்.3' ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.செயற்கைகோள்களை சரியான புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தியது.

எங்கள் மேல் நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய 'ஒன் வெப்' நிறுவனத்திற்கும், 'நியூ ஸ்பேஸ்8 நிறுவனத்திற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

பிரதமருக்கு நன்றி

வணிக ரீதியில் ஏவப்பட்ட 'எல்.வி.எம்.3-எம்.3' ராக்கெட் முக்கியத்துவம் வாய்ந்தது. இதுபோன்ற வர்த்தக ரீதியாக ராக்கெட் ஏவுவதற்கு குறுகிய காலத்தில் அனுமதி அளித்ததுடன், இஸ்ரோவுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் பிரதமருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த திட்டத்துக்கு குறுகிய காலத்தில் அளிக்கப்பட்ட அனுமதியால்தான் திட்டம் சாத்தியமானது.

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டில் 'எஸ்- 200' என்ற மோட்டார் பொருத்தப்பட்டு இருந்தது. இந்தியாவின் கனவு திட்டமான மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்காக இது வடிவமைக்கப்பட்டது. இதன் மூலம் இத்திட்டம் ககன்யான் திட்டத்துக்கான முன்னோடியாக கருதப்படுகிறது. இந்த ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பம் திட்டத்திற்கும் பயன்படுத்தப்படும்

அடுத்து பி.எஸ்.எல்.வி.

வரும் ஏப்ரல் மாதம் வணிக ரீதியில் பி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ஜி.எஸ்.எல்.வி. எம்.கே-3, ஜி.எஸ்.எல்.வி. எம்.கே2 ஆகிய ராக்கெட்டுகள் தற்போது தயார் நிலையில் இருக்கிறது. அவையும் ஒன்றன்பின் ஒன்றாக விண்ணில் ஏவப்படும்.

இந்த ராக்கெட் வெற்றிக்கு உழைத்த என்.எஸ்.ஐ.எல்., இஸ்ரோ மற்றும் 'ஒன் வெப்' நிறுவனங்களுக்கு வாழ்த்துகள். செயற்கைகோள்கள் சரியான புவி சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, இஸ்ரோ பல முக்கிய பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்