< Back
தேசிய செய்திகள்
கொரோனாவால் அனாதை ஆன குழந்தைகளுடன் மதிய உணவு, மேஜிக் ஷோ... அசத்திய அசோக் கெலாட்
தேசிய செய்திகள்

கொரோனாவால் அனாதை ஆன குழந்தைகளுடன் மதிய உணவு, மேஜிக் ஷோ... அசத்திய அசோக் கெலாட்

தினத்தந்தி
|
22 Oct 2022 2:29 PM IST

கொரோனாவால் பெற்றோரை இழந்து அனாதை ஆன குழந்தைகளுடன் மதிய உணவு, மேஜிக் ஷோ மற்றும் புகைப்படம் எடுத்து முதல்-மந்திரி அசோக் கெலாட் அசத்தியுள்ளார்.



ஜெய்ப்பூர்,



ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் ஆட்சி செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகளால் பண்டிகைகள் முடங்கின. இந்த முறை தீபாவளியை சிறப்புடன் கொண்டாட மக்கள் தயாராகி உள்ளனர்.

எனினும், கொரோனா பாதிப்புகளால் பலர் வேலை வாய்ப்பு, வருவாயை இழந்தனர். சில குழந்தைகள் பெற்றோரை இழந்து நிற்கின்றனர். அவர்களை தீபாவளி பண்டிகையையொட்டி மகிழ்விக்க முடிவு செய்த கெலாட், இதற்காக தனது வீட்டின் ஒரு பகுதியை அதற்கேற்றாற்போல் மாற்றினார்.

மொத்தம் 231 குழந்தைகளுக்கு அழைப்பு விடப்பட்டது. அவர்களை பாதுகாத்து வளர்த்து வருபவர்களும் உடன் வர அனுமதி அளிக்கப்பட்டது. எனினும், ஒரு சிலரால் வர முடியவில்லை.

இதன்பின்னர், குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அவற்றில் பீட்சா, சீன நூடுல்ஸ் உள்ளிட்ட பல பதார்த்தங்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு மேஜிக் ஷோ ஒன்றும் நடத்தப்பட்டது. இதனை கண்டு அவர்கள் மகிழ்ந்தனர்.

இதன்பின்பு, விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. அவர்களுடன் கெலாட்டும் கலந்து கொண்டார். பெற்றோரை கொரோனாவால் இழந்த குழந்தைகளுக்கான தீபாவளி நிகழ்ச்சியிது என கெலாட் குறிப்பிட்டார்.

இதன்பின் அவர்களிடம் படிப்பு பற்றியும், வருங்கால திட்டங்கள் மற்றும் பிற விசயங்களையும் கேட்டறிந்து கொண்டார். ஒரு சிலர் அரசு அதிகாரிகளாகவும், சிலர் மருத்துவர்களாகவும் மற்றும் சிலர் போலீஸ் சேவையில் இணையவும் விருப்பம் தெரிவித்து உள்ளனர் என கெலாட் நிருபர்களிடம் கூறியுள்ளார்.

குழந்தைகளுக்கு தீபாவளி பரிசுகளும் வழங்கப்பட்டன. கல்வி கற்பதற்கான உபகரணங்கள், பை, விளையாட்டு பொருட்கள் மற்றும் இனிப்புகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. அவர்களுடன் கெலாட் ஒன்றாக சேர்ந்து புகைப்படமும் எடுத்து கொண்டார்.

மேலும் செய்திகள்