< Back
தேசிய செய்திகள்
100 ஆண்டுகளுக்கு பின் முக்கிய சந்திர கிரகணம்.. இந்தியாவில் தென்படவில்லை
தேசிய செய்திகள்

100 ஆண்டுகளுக்கு பின் முக்கிய சந்திர கிரகணம்.. இந்தியாவில் தென்படவில்லை

தினத்தந்தி
|
25 March 2024 12:37 PM IST

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வந்து, சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

சூரியன் - சந்திரன் - பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வின்போது சூரியனின் ஒளியை சந்திரன் தற்காலிகமாகத் தடுக்கிறது. நெருப்பு வளைய சூரிய கிரகணத்தின்போது சந்திரன் சூரிய ஒளிவட்டத்தின் பெரும்பகுதியை மறைத்து, சந்திரனின் விளிம்புகளைச் சுற்றி சூரிய ஒளி போன்ற ஒரு வளையம் மட்டும் தெரியும். அந்த நேரத்தில் பூமியின் சில இடங்களில் நிழல் ஏற்படும்.

இதேபோல் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வந்து, சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

அவ்வகையில் நடப்பு ஆண்டின் முதல் கிரகணமான பெனும்பிரல் சந்திர கிரகணம் இன்று காலை தொடங்கியது. 10.23 மணிக்கு தொடங்கிய கிரகணம் மாலை 03.02 மணி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் கிரகணம் நிகழ்வதால் இதனை இந்தியாவில் காண முடியாது. வடக்கு மற்றும் தென் அமெரிக்கா முழுவதும் கிரகணத்தை காணலாம்.

100 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோலி பண்டிகை மற்றும் பங்குனி உத்திரம் நாளில் சந்திர கிரகணம் ஏற்படுவதால் இது மிகவும் முக்கியம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. பகலில் கிரகணம் ஏற்படுவதால் இந்தியாவில் தோஷ காலம் பொருந்தாது. கோவில்களில் நடை அடைக்கப்படவில்லை, பங்குனி உத்திர தினம் என்பதால் கோவில்களில் வழக்கம் போல திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

மேலும் செய்திகள்