பகுதி சந்திர கிரகணம்: எங்கே, எப்போது பார்க்கலாம் தெரியுமா?
|சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வந்து, சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
சூரியன் - சந்திரன் - பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வின் போது சூரியனின் ஒளியை சந்திரன் தற்காலிகமாகத் தடுக்கிறது. நெருப்பு வளைய சூரிய கிரகணத்தின் போது சந்திரன் சூரிய ஒளிவட்டத்தின் பெரும்பகுதியை மறைத்து, சந்திரனின் விளிம்புகளைச் சுற்றி சூரிய ஒளி போன்ற ஒரு வளையத்தை மட்டுமே தெரியும் படி இருக்கும். அந்த நேரத்தில் பூமியின் சில இடங்களில் நிழல் ஏற்படும்.
சந்திர கிரகணம்
இதேபோல், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வந்து, சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
அந்த வகையில் கடந்த 14ம் தேதி சூரிய கிரகணம் ஏற்பட்டது. இது இந்தியாவில் தெரியவில்லை. 178 ஆண்டுகளுக்குப் பிறகு மகாளய அமாவாசை தினத்தில் இந்த அரிய கிரகணம் நிகழ்ந்ததால், அந்த தினம் ஜோதிட சாஸ்திரப்படி சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டது. அன்றைய தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் பல ஆண்டுகாலத்திற்கு புண்ணியத்தையும் முன்னோர்களின் ஆசியையும் கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, சூரிய கிரகணத்தன்று ஏராளமான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
பொதுவாக சூரிய கிரகணத்தைத் தொடர்ந்து சந்திர கிரகணம் ஏற்படுவதுண்டு. அவ்வகையில் நாளை பகுதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. நாளை இரவு மற்றும் நாளை மறுநாள் அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் கிரகணம் நிகழும்.
நாளை நள்ளிரவில் பூமியின் மங்கலான நிழல் வட்டத்தில் சந்திரன் நுழைந்தாலும், பூமியின் இருண்ட நிழலில் (அம்ப்ரல் கட்டம்) நாளை மறுநாள் (அக்டோபர் 29) அதிகாலையில் நுழையும். பூமியின் இருண்ட நிழல் சந்திரன் மீது விழுவது, நாளை மறுநாள் (அக்டோபர் 29) அதிகாலை 1:05 மணிக்கு தொடங்கி 02:24 மணி வரை நிகழும் என்று பிஐபி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தெரியுமா?
ஆசியா, ரஷியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, அண்டார்டிகா உள்ளிட்ட பகுதிகளில் கிரகணத்தை பார்க்க முடியும். இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கிரகணம் தெரியும். டெல்லியில் இருந்து பார்த்தால் வானத்தின் தென்மேற்கு பகுதியில் கிரகணம் தெரியும்.
கிரகணத்தை எப்படி பார்ப்பது?
சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் காணலாம். சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. எனினும், பைனாகுலர்கள் அல்லது தொலைநோக்கிகள் மூலம் பார்க்கும்போது மிக தெளிவாக கிரகணத்தை கண்டு ரசிக்கலாம். கிரகணம் நன்றாக தெரியவேண்டுமானால், பிரகாசமான விளக்கு ஒளி இருக்கும் பகுதிகளில் இருந்து விலகி இருண்ட, ஒளி இல்லாத பகுதிகளில் சென்று பார்க்கவேண்டும்.