< Back
தேசிய செய்திகள்
குஜராத்: வைரஸ் நோய் தாக்கி 1200க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
தேசிய செய்திகள்

குஜராத்: வைரஸ் நோய் தாக்கி 1200க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

தினத்தந்தி
|
31 July 2022 5:52 PM IST

குஜராத்தில் 1200 கால்நடைகள் தோல் கழலை நோயால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கின்றன.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் சனிக்கிழமை நிலவரப்படி இதுவரை 1200 கால்நடைகள், தோல் கழலை நோய் அல்லது லம்பி தோல் நோய் ( எல்.எஸ்.டி ) எனப்படும் நோயால் தாக்கப்பட்டு குறிப்பாக பசுக்கள் மற்றும் எருமைகள் உயிரிழந்திருக்கின்றன என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆடு , மாடு போன்ற கால்நடை உயிரினங்களை தாக்கும் பெரியம்மை நோயின் தாக்கம் இந்தியாவில் தீவிரமாகியுள்ளது.குஜராத் மாநிலத்தில் 17 மாவட்டங்களில் உள்ள வளர்ப்பு பிராணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நோயை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது. அதன்படி விலங்குகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

குஜராத் மாநில விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு துறை மந்திரி ராகவஜி பட்டேல் கூறுகையில், 1200க்கும் மேற்பட்ட கால்நடைகள் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளன. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட விலங்குகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் மொத்தம் உள்ள 33 மாவட்டங்களில், 17 மாவட்டங்களில் உள்ள விலங்குகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக சவுராஷ்டிரா பிராந்தியத்தில் அதிகம் பரவியுள்ளது என்றார்.

குஜராத் மாநிலத்தில் கட்ச், ஜாம்நகர், தேவ பூமி துவாரகா, ராஜ்கோட், போர்பந்தர், சூரத், ஆரவல்லி ஆகிய பல மாவட்டங்களில் இந்த நோய் விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசு, விலங்குகளை ஒன்று சேர்ந்து வைக்காமல் மற்றும் கால்நடை சந்தை ஆகியவற்றை தவிர்க்குமாறு அறிவுறுத்தி உள்ளது.

மேலும், ஒரு மாவட்டம் அல்லது தாலுகா மற்றும் நகரிலிருந்து இன்னொரு ஊருக்கு விலங்குகளை கொண்டு செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளது.

இதுவரை இந்த நோயால் பாதிக்கப்பட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன. 1700க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கால்நடைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.

குஜராத் முழுவதும் 122 கால்நடை மருத்துவ அதிகாரிகள் மற்றும் 568 கால்நடை ஆய்வாளர்கள் இந்த நோயை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் கூடுதலாக 298 கால்நடை மருத்துவர்கள் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு 10 கிராமங்களுக்கும் ஒரு நடமாடும் கால்நடை மருத்துவ குழு பிரத்யேகமாக அமைக்கப்பட்டு நோய் பரவல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

லம்பி தோல் நோய் எனப்படும் வைரஸ் நோய், பெரும்பாலும் கொசுக்கள், ஈக்கள் பூச்சிகள், வண்டுகள் ஆகியவற்றால் மோசமான சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீர் மூலம் உருவாகி, விலங்குகளுக்கு பரவுகிறது.

பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் காய்ச்சல், மூக்கு மற்றும் கண்களில் நீர் வடிதல், அதிகமாக எச்சில் உமிழ்தல், பால் உற்பத்தி குறைவு, உணவு உண்ண சிரமப்படுதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். கவனிக்கப்படாவிட்டால், மேலும் தீவிர பாதிப்பாக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்