தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது
|பெங்களூரு மற்றும் பீதரில் தொடர் மழை பெய்து வருகிறது.
பெங்களூரு:-
தொடர் மழை
கர்நாடகத்தில் கடந்த 3 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கலபுரகி, பீதர், கொப்பல் மாவட்டங்களில் 3 நாட்களாக இடைவிடாது பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பெங்களூருவில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொட்டிய திடீர் மழையால் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை முதலே பெங்களூருவில் ராஜாஜிநகர், சிவாஜிநகர், யஷ்வந்தபுரம், ஜெயநகர், மைசூரு சாலை, சாம்ராஜ்பேட்டை, சாந்திநகர், அல்சூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை வரை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. மேலும் சுரங்க சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி தாலுகா பெனகனஹள்ளி கிராமத்தில் இரவு முழுவதும் பெய்த மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகினர். யாதகிரியில் பெய்து வரும் மழையால் அங்குள்ள பீமா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. யாதகிரி தாலுகாவில் கொல்லூர் மற்றும் மதரக்கல் இடையே பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அதன் அருகே தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. கனமழையால் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டு கிராமத்திற்கான இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பீதர் டவுன்
இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், ஆபத்தான் முறையில் பாலத்தின் தூண்களில் ஏணிகளை பயன்படுத்தி ஆற்றை கடந்து வருகின்றனர். பீமா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரையோரம் இருந்த கங்கலேஷ்வரா மற்றும் வீர ஆஞ்சநேயா கோவில்களை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது.
ராமநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் பீதர் மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்று மழை பெய்த நிலையில், பால்கி தாலுகா சலகாபுரா கிராமத்தில் வீட்டின் கூரை இடிந்து விழுந்தது. பீதர் டவுன் பகுதியில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.