திருமணமான ஒரே மாதத்தில் பிரிந்து சென்ற காதல் மனைவி... தேசிய கபடி வீரர் தூக்கிட்டு தற்கொலை
|வினோத், தனுஜா இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு தாலுகா தேகுரு கிராமத்தை சேர்ந்தவர் வினோத் ராஜ் அரஸ் (வயது 24). இவர் தேசிய அளவிலான கபடி போட்டிகளில் விளையாடி உள்ளார். வினோத்திற்கும், அதேபகுதியை சேர்ந்த தனுஜா (22) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் செல்போன் மூலம் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இதனை அறிந்த தனுஜாவின் பெற்றோர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் வினோத், தனுஜா இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் 2 பேரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதி அப்பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் வினோத், தனுஜா ஆகியோர் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்தநிலையில், தனுஜாவின் பெற்றோர் சிக்கமகளூரு புறநகர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வினோத், தனுஜா ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு பேச்சுவார்த்தை நடத்த அழைத்தனர். போலீசாரின் அழைப்பின் பேரில் வினோத், தனுஜா ஜோடி போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அப்போது பெற்றோரை பார்த்த தனுஜா பாசத்தில் அவர்களை கட்டித்தழுவினார். இதையடுத்து பாசமழையில் பெற்றோர் உடனே தனுஜா சென்றார்.
இதனால் மனமுடைந்த வினோத் கடந்த சில நாட்களாக நண்பர்கள் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். மேலும் கபடி விளையாடவும் செல்லவில்லை என தெரிகிறது. இந்தநிலையில் காதல் மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் இருந்த வினோத் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சிக்கமகளூரு புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிக்கமகளூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.