எல்லை கடந்த காதல்...! சீமா ஹைதர் பாகிஸ்தான் உளவாளியா...? அச்சுறுத்தும் பயங்கரவாத குழு...!
|பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள ஜக்ராணி பாகிஸ்தான் குழு ஒன்று சீமா ஹைதரை மிரட்டும் வீடியோவை வெளியிட்டு உள்ளது
புதுடெல்லி
பாகிஸ்தான் பெண் சீமாவின் காதல் கதை ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் விவாதப் பொருளாக மாறி உள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர்(30) இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். பப்ஜி மொபைல் கேம் விளையாடும் போது, உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் (23) மீனா என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
சீமா தனது 4 குழந்தைகளுடன் பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி இந்தியா வந்தார். சச்சினுடன் வசித்து வந்தார்.
காதலன் சச்சினுடன் வாழ தனது நான்கு குழந்தைகளுடன் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த சீமா ஹைதருக்கு ஜூலை 7 ஆம் தேதி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இப்போது சீமா பாகிஸ்தான் திரும்ப விரும்பவில்லை. அவர் இந்திய கலாச்சாரத்தை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டதாக கூறி உள்ளார்.
நாட்டின் பாதுகாப்பை காரணம் காட்டி சிலர் சீமாவை பாகிஸ்தான் உளவாளியாக கருதி தண்டிக்க கோரியும், சிலர் அவரது காதலுக்கு ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.
சீமா ஹைதர் பல பாஸ்போர்ட்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் அவர் மீது பல சந்தேகங்கள் எழுகின்றன. சீமா ஹைதர் விசாரணை அமைப்புகளின் கண்காணிப்பில் இருப்பதற்கு இதுவே காரணம். காதலுக்காக இந்தியா வர வேண்டும் என்றால், அவர் ஏன் சட்டவிரோதமான முறையை பின்பற்றினார் என்ற கேள்வியும் எழுப்பபடுகிறது.
சீமா ஹைதர் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தார். அதன் பிறகு கிரேட்டர் நொய்டாவின் ரபுபுரா பகுதியில் சச்சின் மற்றும் அவர்களது குழந்தைகளுடன் வாடகை குடியிருப்பில் வசிக்கத் தொடங்கினார்.
நேபாளம் வழியாக விசா இல்லாமல் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் சீமா ஹைதர் ஜூலை 4ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியதற்காக சச்சினும் கைது செய்யப்பட்டார். ஆனால், ஜூலை 7ம் தேதி இருவருக்கும் ஜாமீன் கிடைத்தது.
இந்த நிலையில் சீமா ஹைதரை திருப்பி அனுப்புங்கள், இல்லையெனில் சிந்துவில் இந்து பெண்களை பலாத்காரம் செய்து கொன்று விடுவோம் என பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு மிரட்டல் வீடியோ வெளியிட்டு உள்ளது.
இதற்கிடையில், பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள ஜக்ராணி பாகிஸ்தான் குழு ஒன்று சீமா ஹைதரை மிரட்டும் வீடியோவை வெளியிட்டு உள்ளது.சீமா ஹைதரை அச்சுறுத்தும் நபர்கள் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது. வீடியோவில் சீமா ஹைதரை இந்தியா பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பவில்லை என்றால், பாகிஸ்தானில் சிந்து பகுதியில் உள்ள இந்து பெண்களை பலாத்காரம் செய்து கொன்று விடுவோம் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
ஜூலை 11 அன்று @maheshmvasu என்ற பயனரால் டுவிட்டரில் வீடியோ பகிரப்பட்டது. இதில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இந்து பெண்களை மிரட்டுவது வெளிப்படையாகவே தெரிகிறது.
சீமா ஹைதரின் முதல் கணவரின் முழுப் பெயர் குலாம் ஹைதர் ஜக்ராணி, அவர் அதே பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். தனது மனைவி மற்றும் குழந்தைகளை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்புமாறு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசிடம் குலாம் ஹைதர் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.