< Back
தேசிய செய்திகள்
கோடிகளில் நன்கொடை வழங்கிய `லாட்டரி மார்ட்டின்: வேறு எந்தெந்த நிறுவனங்கள், கட்சிகள்..? அதிர வைத்த லிஸ்ட்
தேசிய செய்திகள்

கோடிகளில் நன்கொடை வழங்கிய `லாட்டரி மார்ட்டின்': வேறு எந்தெந்த நிறுவனங்கள், கட்சிகள்..? அதிர வைத்த லிஸ்ட்

தினத்தந்தி
|
15 March 2024 12:00 AM IST

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் வழங்கியதில், லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி இந்த தேர்தல் பத்திரங்கள் முறையை சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15-ந்தேதி ரத்து செய்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி மற்றும் நிதியை கொடுத்தவர்களின் விவரங்களை வெளியிடவும் எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதோடு எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை மார்ச் 15-ந்தேதி மாலை 5 மணிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி இந்திய தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கி வழங்கியது. அதில், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2024 பிப்ரவரி 15-ந்தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 22,030 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணைக்கு மீண்டும் வரவுள்ள நிலையில் இப்பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஏப்ரல் 12, 2019 முதல் ரூ. 1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி ஆகிய மூன்று மதிப்புள்ள பத்திரங்களை வாங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகிய விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் இரண்டு பட்டியல்கள் உள்ளன. முதலாவதாக, தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள், தொகை மதிப்பு மற்றும் தேதிகளுடன் வெளியிடப்பட்டுள்ளன. மற்றொன்றில் அரசியல் கட்சிகளின் பெயர்கள் மற்றும் பத்திரங்களின் மதிப்புகள் மற்றும் அவை பணமாக்கப்பட்ட தேதிகள் உள்ளன. இருப்பினும், எந்த நிறுவனம் எந்தக் கட்சிக்கு நன்கொடை அளித்தது என்ற விவரங்கள் சேர்த்து இடம்பெறவில்லை.

கட்சிகள்:-

தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து ரொக்கமாக பெற்று கட்சிகளின் பட்டியலில் பா.ஜனதா, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., பாரத் ராஷ்ட்ரிய சமிதி, ஜனசேனா, சிவசேனா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், ஆர்.ஜேடி, ஆம் ஆத்மி, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

நிறுவனங்கள்:-

தேர்தல் பத்திரங்களை தனி நபர்கள், நிறுவனங்கள் வாங்கிய தேதி வாரியாக இடம்பெற்றுள்ள இன்னொரு பட்டியலில் ஏர்டெல், வேதாந்தா, முத்தூட், பஜாஜ், உத்தராகண்ட் சுரங்க பணிகளை மேற்கொண்ட நவ யுகா, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், மேகா இன்ஜினியரிங், பிரமல் எண்டர்பிரைசஸ், டோரண்ட் பவர், டிஎல்எப் கமர்ஷியல் டெவலப்பர்ஸ், அப்பல்லோ டயர்ஸ், லட்சுமி மிட்டல், எடெல்வீஸ், பிவிஆர், கெவென்டர், சுலா ஒயின், வெல்ஸ்பன் மற்றும் சன் பார்மா உள்ளிட்ட பல நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் வழங்கியதில், லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி மார்ட்டினின் Future Gaming and Hotel services என்கிற நிறுவனம் மிக அதிகமாக ரூ.1,368 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல Mega Engineering and Infrastructure Limited என்கிற நிறுவனம் ரூ. 821 கோடியும், Quick Supply Chain Private Limited ரூ. 410 கோடியும், Haldia Energy Limited ரூ. 377 கோடியும், வேதாந்தா நிறுவனம் ரூ. 375.65 கோடியும், Western UP Power Transmission ரூ. 220 கோடியும், ஏர்டெல் நிறுவனம் ரூ. 183 கோடியும், ஜிண்டால் ஸ்டீல் நிறுவனம் ரூ. 123 கோடியும், பிர்லா கார்பன் இண்டியா பிரைவேட் நிறுவனம் ரூ. 105 கோடியும், டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் ரூ. 80 கோடியும், Chennai Green Woifs Private Limited நிறுவனம் ரூ. 15 கோடியும் வழங்கி உள்ளன.



மேலும் செய்திகள்