< Back
தேசிய செய்திகள்
உ.பி.யில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியான சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது - ஜனாதிபதி வேதனை
தேசிய செய்திகள்

"உ.பி.யில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியான சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது" - ஜனாதிபதி வேதனை

தினத்தந்தி
|
2 July 2024 7:14 PM IST

உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் புல்ராய் கிராமத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஹத்ராஸ்,

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் இன்று இந்து மத சத்சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து மக்கள் புறப்பட்டபோது கடும் நெரிசல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் முண்டியடித்து சென்றபோது பலர் கீழே விழுந்தனர். நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பலர் உயிரிழந்து வருகின்றனர். சிலருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் இந்த துயர சம்பவம் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு வேதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான பக்தர்கள் உயிரிழந்த செய்தி நெஞ்சை பதற வைக்கிறது. குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று அதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்