லாரி மீது உரசிய மின்வயரை தூக்கியபோது மின்சாரம் தாக்கி டிரைவர், கிளீனர் சாவு
|கொள்ளேகாலில் கரும்பு பாரம் ஏற்றி சென்ற லாரி மீது உரசிய மின்வயரை தூக்கியபோது, மின்சாரம் தாக்கி டிரைவர், கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொள்ளேகால்:
கொள்ளேகாலில் கரும்பு பாரம் ஏற்றி சென்ற லாரி மீது உரசிய மின்வயரை தூக்கியபோது, மின்சாரம் தாக்கி டிரைவர், கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கரும்பு பாரம்
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா குண்டால் அணை பகுதியை சேர்ந்தவர் சித்தப்பா. விவசாயி. இவர் தனது விளைநிலத்தில் கரும்பு பயிரிட்டிருந்தார். இந்த நிலையில், அவரது தோட்டத்தில் அறுவடை செய்த கரும்பை மண்டியாவில் உள்ள சர்க்கரை ஆலைக்கு ஏற்றி செல்வதற்காக லாரி ஒன்று வந்தது.
அந்த லாரியை மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா அங்கரபுராவை சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஓட்டினார். மேலும் சின்னு என்பவர் கிளீனராக இருந்தார். இந்த நிலையில் லாரியில் கரும்பு பாரத்தை ஏற்றி கொண்டு அவர்கள் மண்டியா நோக்கி புறப்பட்டு சென்றனர்.
டிரைவர், கிளீனர் சாவு
அப்போது குண்டால் அணை அருகே துர்கம்மா கோவில் பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் ேமலே சென்ற உயர் அழுத்த மின்வயர் ஒன்று லாரியில் உரசி உள்ளது. இதனால் லாரியில் உரசியப்படி இருந்த மின்வயரை தூக்கி விடுவதற்காக சின்னு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மின்வயரை தொட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் பிரகாஷ், சின்னுவை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் தாக்கி உள்ளது.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பிரகாசும், சின்னுவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் உடனடியாக செஸ்காம் அதிகாரிகளுக்கும், கொள்ளேகால் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணை
இதையடுத்து அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன்பின்னர் போலீசார், மின்சாரம் தாக்கி பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மேலே சென்ற உயர் அழுத்த மின்வயர் கரும்பு ஏற்றி சென்ற லாரி மீது உரசியதால் மின்சாரம் தாக்கி டிரைவர் மற்றும் கிளீனர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து கொள்ளேகால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.