< Back
தேசிய செய்திகள்
மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது..!
தேசிய செய்திகள்

மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது..!

தினத்தந்தி
|
20 Sept 2023 7:42 PM IST

மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று இடம்பெயர்ந்தது. புதிய நாடாளுமன்றத்தின் முதல் அலுவலாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால், மசோதாவை தாக்கல் செய்தார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, 15 ஆண்டுகளுக்கு மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்கிறது. பெண்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு அளிக்கப்படும். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. எம்.பி.க்களுக்கு வாக்குச்சீட்டு அளிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவாகின. இதன் மூலம் மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்க மசோதா வழிவகை செய்யும். வாக்கு சீட்டின் மூலம் நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் மோடியும் பங்கேற்றார்.

மேலும் செய்திகள்