< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்றத்தில் நெருக்கடி நிலையை கண்டித்து சபாநாயகர் தீர்மானம் - காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு
தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தில் நெருக்கடி நிலையை கண்டித்து சபாநாயகர் தீர்மானம் - காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு

தினத்தந்தி
|
27 Jun 2024 4:15 AM IST

நாடாளுமன்றத்தில், நெருக்கடி நிலைக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் வாசித்தார். காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், நெருக்கடி நிலை அமலுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை அவர் வாசித்தார். அப்போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

கூச்சல்-குழப்பத்துக்கிடையே ஓம் பிர்லா வாசித்த தீர்மானத்தில், "1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி இந்திய வரலாற்றில் கருப்பு அத்தியாயமாக அறியப்படும். அந்த நாளில்தான், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். அம்பேத்கர் கட்டமைத்த அரசியல் சாசனம் மீது தாக்குதல் தொடுத்தார்.

அந்த காலகட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒட்டுமொத்த நாடும் சிறையாக மாற்றப்பட்டது. ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நீதித்துறையின் தன்னாட்சிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. பொதுமக்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டது. அப்போது கொண்டுவரப்பட்ட சமூக விரோத, சர்வாதிகார கொள்கைகளால் ஏழைகள், தலித்துகள், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டது. அவர்களுக்கு சபை இரங்கல் தெரிவிக்கிறது.

ஜனநாயகத்தின் தாயான இந்தியா, ஜனநாயக மாண்புகளுக்கும், விவாதத்துக்கும் பெயர் பெற்றது. எப்போதும் இந்தியாவில் ஜனநாயக மாண்புகள் ஊக்குவிக்கப்படும். அத்தகைய இந்தியாவில் இந்திரா காந்தி சர்வாதிகாரத்தை திணித்தார்.

நாட்டின் ஜனநாயக மாண்புகள் அழிக்கப்பட்டன. கருத்து சுதந்திரம் நசுக்கப்பட்டது. நெருக்கடி நிலை அமல்படுத்த எடுக்கப்பட்ட முடிவுக்கு இந்த சபை கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. நெருக்கடி நிலையை எதிர்த்து போராடிய அனைவரின் உறுதிப்பாட்டை பாராட்டுகிறது.

நெருக்கடி நிலை அமலாக்கத்தின் 50-வது ஆண்டில் நுழையும் இந்த நேரத்தில், அம்பேத்கர் கட்டமைத்த அரசியல் சாசனத்தை பாதுகாக்க 18-வது மக்களவை உறுதி எடுத்துக் கொள்கிறது" என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கோஷத்துக்கிடையே சபாநாயகர் தீர்மானத்தை வாசித்து முடித்தார். தீர்மானத்துக்கு ஆதரவாக பிரதமர் மோடி பேசினார். பின்னர், உறுப்பினர்கள் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுனம் அனுசரித்தனர். அதைத்தொடர்ந்து, சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்