நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 6-ந்தேதி வெளியீடு
|காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்,
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்ட பணிகளில் காங்கிரஸ் கட்சி மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. இதற்கு மத்தியில் கட்சியின் தேர்தல் அறிக்கை அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி வெளியிடப்படும் என ராஜஸ்தான் மாநிலத்துக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா கூறியுள்ளார்.
காங்கிரசின் தேர்தல் வியூகங்கள் குறித்த ஆலோசனை நேற்று ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய ரந்தாவா, இந்த தகவலை வெளியிட்டார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 'ஜெய்ப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்கள்' என்று தெரிவித்தார்.
இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகள் குறித்து இன்றைய (நேற்று) கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறிய ரந்தாவா, அதற்கான பொறுப்புகளை மாநில முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் மற்றும் கட்சியின் மாநில தலைவர் கோவிந்த் சிங் தோதஸ்ராவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறினார்.