பெங்களூரு உள்பட மரிநலம் முழுவதும் வட்டார போக்குவரத்து சோதனை சாவடிகளில் லோக் அயுக்தா அதிரடி சோதனை
|பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வட்டார போக்குவரத்து சோதனை சாவடிகள் மற்றும் அலுவலகங்களில் லோக் அயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். முக்கிய ஆவணங்கள், பணம் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு:
சோதனை சாவடிகளில் சோதனை
பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து சோதனை சாவடிகள் மற்றும் அலுவலகங்களில் இடைத்தரகர்கள் தலையீடு அதிகமாக இருப்பதுடன், சரக்கு மற்றும் பிற வாகன ஓட்டிகளிடம் இருந்து அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக லோக் அயுக்தா போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தது. இதையடுத்து, நேற்று அதிகாலை 4 மணியளவில் பெங்களூரு அத்திபெலே, சிக்பள்ளாப்பூர் பாகேபள்ளி, கோலார், விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டே, சாம்ராஜ்நகா் மாவட்டம் குண்டலுபேட்டை, விஜயாப்புரா மாவட்டம், பெலகாவி மாவட்டம் நிப்பானி ஆகிய வட்டார போக்குவரத்து சோதனை சாவடிகளில் லோக் அயுக்தா போலீசாா் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
பெங்களூரு அத்திபெலேயில் உள்ள சோதனை சாவடி, தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. தமிழகத்தில் இருந்து வரும் சரக்கு வாகனங்களிடம் இருந்து லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்ததால், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஜோஷி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினார்கள். வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றிருந்தது. அந்த சோதனை சாவடியில் இருந்த ஆவணங்களை லோக் அயுக்தா போலீசார் பரிசீலனை நடத்தினாா்கள். இடைத்தரகர்கள் தலையீடு குறித்து அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
மாறு வேடத்தில் சென்று...
இதுபோன்று, மாநிலத்தில் உள்ள மற்ற சோதனை சாவடிகள் மற்றும் சில வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டேயில் உள்ள சோதனை சாவடியில் அதிக அளவு லஞ்சம் வாங்கப்படுவதாக அடிக்கடி குற்றச்சாட்டுகள் வந்தது. இதன் காரணமாக அந்த சோதனை சாவடிக்கு லோக் அயுக்தா போலீசார் மாறுவேடத்தில் சென்றிருந்தாா்கள்.
அதாவது தலையில் துண்டை கட்டி கொண்டு சாதாரண தொழிலாளி போன்று லோக் அயுக்தா போலீசார் சோதனை சாவடி அருகே நின்று கொண்டு இருந்தார்கள். வாகனங்களை சோதனை செய்வதை கவனித்த போலீசார், பின்னர் திடீரென்று சோதனை சாவடியில் புகுந்து லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தி அதிர்ச்சி கொடுத்தனர். அந்த சோதனை சாவடியில் இருந்து முக்கிய ஆவணங்கள், பணத்தை கைப்பற்றி எடுத்து சென்றனர். இந்த சோதனை தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவும் லோக் அயுக்தா போலீசார் முடிவு செய்துள்ளனர்.