காஷ்மீரில் சுட்டு கொல்லப்பட்ட காஷ்மீரி பண்டிட் இறுதி சடங்கை நடத்திய உள்ளூர் முஸ்லிம்கள்
|ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட காஷ்மீரி பண்டிட் இறுதி சடங்கை உள்ளூர் முஸ்லிம்கள் நடத்தியுள்ளனர்.
புல்வாமா,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அச்சன் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் சர்மா. வங்கி ஒன்றில் பாதுகாவலராக பணியாற்றி வந்து உள்ளார். இந்நிலையில், அவரை பயங்கரவாதிகள் நேற்று காலை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடினர்.
இதில் படுகாயமடைந்த சஞ்சய், உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு, அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும், துப்பாக்கி குண்டுகளால் படுகாயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
அவரது இறுதி சடங்குகள் இன்று நடந்தன. இதனை உள்ளூர்வாசிகளான முஸ்லிம்கள் தங்களது சொந்த செலவில் நடத்தினர். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் சமூக நல்லிணக்கம் நீடிப்பதற்காக நீண்டகாலமாகவே இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாத மத்தியில் காஷ்மீரி பண்டிட்டுகளை இலக்காக கொண்டு தாக்குதல் தொடர்ந்தது. இந்நிலையில், சற்று குறைந்திருந்த பயங்கரவாத தாக்குதல் மீண்டும் அந்த பகுதியில் அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், இறுதி சடங்கில் மூத்த காவல் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். சஞ்சய் சுடப்பட்டதும், உடனடியாக காப்பாற்ற சென்றவர்களில் ஒருவர் குலாம் முகமது. இந்த படுகொலைக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து உள்ள அவர், காஷ்மீரி மக்களுக்கு எதிராக நடைபெறும் இதுபோன்ற தாக்குதல்கள் தொடர கூடாது என கூறினார்.
சஞ்சயை மருத்துவமனைக்கு சென்று சேர்த்ததும் அவருக்கு ரத்தம் கொடுக்க தயாரானவர்களில் அவரும் ஒருவர். எனினும், சஞ்சய் உயிரிழந்து விட்டார். அவரது மரணத்திற்கு துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கண்டனம் தெரிவித்து உள்ளார். தெர்டர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது.