சேர்ந்து வாழ்வதை திருமணமாக அங்கீகரிக்க முடியாது - கேரள ஐகோர்ட்டு உத்தரவு
|சேர்ந்து வாழ்வதை திருமணமாக அங்கீகரிக்க முடியாது; சட்டப்படியான திருமணம் மட்டுமே செல்லும் என கேரள ஐகோர்ட்டு கூறியுள்ளது.
கொச்சி,
கேரளாவைச் சேர்ந்த ஒரு இந்து-கிறிஸ்தவ ஜோடி கடந்த 2006-ம் ஆண்டு முதல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்துள்ளனர். அதற்காக அவர்கள் ஒரு ஒப்பந்தத்தையும் பதிவு செய்துள்ளனர். அந்த தம்பதிக்கு ஒரு 16 வயது குழந்தை உள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து சேர்ந்து வாழ விரும்பாத அந்த தம்பதி, விவாகரத்து கோரி ஒரு குடும்ப கோர்ட்டை நாடினர். அவர்களின் திருமணம், சிறப்பு திருமண சட்டத்தின்படி நடைபெறவில்லை என்று கூறி அந்த தம்பதியின் மனுவை குடும்ப கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
ஐகோர்ட்டில் மேல்முறையீடு
அதை எதிர்த்து அவர்கள் கேரள ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கை நீதிபதிகள் முகமது முஷ்டாக், சோபி தாமஸ் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அந்த அமர்வு பிறப்பித்த உத்தரவில், 'சேர்ந்து வாழ்வதை (லிவ்-இன் ரிலேசன்ஷிப்) இன்னும் திருமணமாக சட்டம் அங்கீகரிக்கவில்லை. தனிநபர் சட்டம் அல்லது சிறப்பு திருமண சட்டம் போன்ற மதச்சார்பற்ற சட்டத்தின்படி நடைபெற்ற திருமணத்தைத்தான் சட்டம் அங்கீகரிக்கிறது.
விவாகரத்து கோர முடியாது
ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்து வாழ முடிவெடுத்த ஒரு ஜோடி, அதை திருமணம் என்று கூறவும், அதன் அடிப்படையில் விவாகரத்து கோரவும் முடியாது.
ஒப்பந்த அடிப்படையில் செய்துகொள்ளப்பட்ட எந்த திருமணமும், விவாகரத்து வழங்குவதற்கான சட்டத்தின்கீழ் இதுவரை அங்கீகாரம் பெறவில்லை. எனவே, இந்த மனுவை குடும்ப கோர்ட்டு விசாரணைக்கே ஏற்றிருக்க கூடாது. அதை தள்ளுபடி செய்ததற்குப் பதிலாக, விசாரணைக்கு ஏற்கத்தக்கது அல்ல என்று திருப்பி அனுப்பியிருக்க வேண்டும்.
தள்ளுபடி
குறிப்பிட்ட ஜோடி, தங்களுக்கான தீர்வை வேறு இடத்தில் தேடிக்கொள்ள அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.