< Back
தேசிய செய்திகள்
மதுபான கொள்கை ஊழல் வழக்கு: கவிதாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு
தேசிய செய்திகள்

மதுபான கொள்கை ஊழல் வழக்கு: கவிதாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு

தினத்தந்தி
|
7 May 2024 4:34 PM IST

நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் கவிதா இன்று டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

புதுடெல்லி,

மதுபான லைசென்ஸ் பெற 100 கோடி ரூபாய் அளவில் ஆம் ஆத்மி கட்சிக்கு லஞ்சம் கொடுத்ததாக சவுத் குரூப்பின் முக்கிய குற்றவாளியாக சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரி கவிதா ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கவிதாவுக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.

இதனிடையே, இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கவிதாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று ரோஸ் அவன்யூ கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதாகவும், கவிதாவின் மீது ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதால் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்த வழக்கில் கவிதாவுக்கு மே 20ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்