விதான சவுதாவுக்கு மதுபாட்டிலுடன் வந்த போலீஸ்காரர்; தரையில் விழுந்து உடைந்ததால் பரபரப்பு
|பெங்களூருவில் விதான சவுதாவுக்கு போலீஸ்காரர் எடுத்து வந்த மதுபாட்டில் தரையில் விழுந்து உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் விதான சவுதாவுக்கு போலீஸ்காரர் எடுத்து வந்த மதுபாட்டில் தரையில் விழுந்து உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுபாட்டில் உடைந்தது
பெங்களூருவில் கர்நாடக அரசின் அதிகார மையமான விதான சவுதா உள்ளது. இந்த கட்டிடத்தில் தான் சட்டசபை கூட்டம் நடைபெறும். இந்த கட்டிடத்திற்குள் செல்வதற்கு முன்பு பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார், அனைவரையும் முழு சோதனை செய்த பின்னர் தான் அனுமதிப்பார்கள். கடந்த 2022-ம் ஆண்டு இறுதியில் விதான சவுதாவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிகாரிகள் பலர் வந்தனர்.
அப்போது அதிகாரி ஒருவர் முறையான ஆவணங்கள் இன்றி ரூ.10 லட்சத்தை எடுத்து வந்தார். அதை விதான சவுதா போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் இறுதியில் அந்த அதிகாரி, தான் வாங்கிய கடனை கொடுப்பதற்காக பணத்தை எடுத்து வந்தது தெரிந்தது. இந்த விவகாரம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விதான சவுதா வளாகத்திற்குள் கொண்டு வந்த மதுபாட்டில் கீழே தரையில் விழுந்து உடைந்த சம்பவம் நேற்று நடைபெற்றது.
அதாவது நேற்று வழக்கம் போல் விதான சவுதாவுக்கு அதிகாரிகள் உள்ளிட்டோர் வந்து சென்றனர். அப்போது போலீஸ்காரர் ஒருவர் விதான சவுதா வளாகத்திற்கு வந்தார். பின்னர், அவர் வெளியே புறப்பட்டார். அப்போது அவர் கையில் வைத்திருந்த பையில் இருந்து மதுபாட்டில் ஒன்று தரையில் விழுந்து உடைந்து சிதறியது. உடனே அவர் உடைந்த பாட்டில் துண்டுகளை எடுத்து தனது பையில் போட்டார். அதை அந்த பகுதியில் இருந்தவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
விதான சவுதாவுக்குள்
இதற்கிடையே போலீஸ்காரர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். மேலும் வளாகத்தைவிட்டு வெளியேறினார். இதுகுறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். விதான சவுதா வளாகத்திற்குள் போலீஸ் பாதுகாப்பையும் மீறி மதுபாட்டில் எப்படி வந்தது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
மேலும், இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த போலீஸ்காரர் யார், எதற்காக மதுபாட்டிலுடன் சட்டசபை கட்டிடத்திற்கு வந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து விதான சவுதா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.