முத்தப்போட்டி விவகாரத்தில் மேலும் 7 மாணவர்கள் கைது
|மங்களூருவில், அடுக்குமாடி குடியிருப்பில் முத்தப்போட்டி விவகாரத்தில் மேலும் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் 2 மாணவிகளை கற்பழித்ததும் தெரியவந்துள்ளது.
மங்களூரு:
மங்களூருவில், அடுக்குமாடி குடியிருப்பில் முத்தப்போட்டி விவகாரத்தில் மேலும் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் 2 மாணவிகளை கற்பழித்ததும் தெரியவந்துள்ளது.
வீடியோ வைரல்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியின் சீருடை அணிருந்த மாணவர், மாணவி உதட்டோடு, உதடாக(லிப்-லாக்) முத்தமிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ, மங்களூரு போலீசாரின் கவனத்திற்கு வந்தது.
இதையடுத்து விசாரணை நடத்தியதில் அந்த வீடியோவில் இருப்பவர்கள் மங்களூரு தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என்பதும், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து முத்தப்போட்டி நடத்தியதும் தெரியவந்தது. இதனை ஒரு மாணவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தான் வைரலாகி வந்தது தெரியவந்தது.
8 பேர் கைது
இதுதொடர்பாக முதற்கட்டமாக கல்லூரி மாணவர் ஒருவரை மங்களூரு வடக்கு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மேலும் 7 மாணவர்களை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
இதுதொடர்பாக மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் தெரிவித்ததாவது:-
மங்களூருவில் தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் முத்தப்போட்டி நடத்திய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. இதுதொடர்பாக 8 மாணவர்களை, போலீசார் கைது செய்துள்ளனர்.
பாலியல் தொல்லை
அடுக்குமாடி குடியிருப்பில் 8 மாணவர்கள் மற்றும் 2 மாணவிகள் இருந்துள்ளனர். அப்போது அவர்கள், 'ட்ரூத் அண்ட் டேர்' என்ற பெயரில் விளையாடியுள்ளனர். இந்த விளையாட்டின்போது அவர்கள், தங்களுக்கான வாய்ப்பு வரும்போது மற்றவர்களிடம் சவால் விடுத்து ஒரு கேள்வி கேட்பார்கள். கேள்விக்கு சரியான பதில் சொன்னால் அந்த சவாலை செய்யவேண்டிய நிர்பந்தம் வரும். அதன்படி முத்தமிடும் சவாலும் நடந்துள்ளது.
இதில் 8 மாணவர்கள், 2 மாணவிகளை அடுத்தடுத்து முத்தமிட்டு பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வீடியோவை காண்பித்து மிரட்டி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனை ஒரு மாணவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களிலும்,கல்லூரி வாட்ஸ்-அப் குரூப்பிலும் பதிவிட்டுள்ளார்.
போக்சோ சட்டம்
இதைப்பார்த்த கல்லூரி நிர்வாகம், சம்பந்தப்பட்ட மாணவர்களை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் நடந்து 6 மாதங்கள் ஆகிறது. ஆனால் கல்லூரி நிர்வாகம் தரப்பில் இருந்து எந்த புகாரும் வரவில்லை. கைதான 8 பேர் மீது போக்சோ உள்ளிட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தண்டனை சட்டப்படி 376 (ஒரே பெண்ணை மீண்டும், மீண்டும் பலாத்காரத்துக்கு உட்படுத்துதல்), 354 (உள்நோக்கத்துடன் தாக்குதல்), 354 சி (பெண்ணின் அந்தரங்களை பார்ப்பது அல்லது படம் பிடிப்பது) மற்றும் 120 பி (தொடர் குற்றசதியில் ஈடுபடுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் மங்களூரு வடக்கு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அதேநேரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.