பிரதமர் மோடி பந்துவீசுவது போலவும், அமித்ஷா பேட்டிங் செய்வது போலவும்... சஞ்சய் ராவத் கிண்டல்
|உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மும்பை,
ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் இந்த இறுதி போட்டியை கோடிக்கணக்கான இந்திய ரசிகர்கள் ஆவலாக பார்த்து வருகின்றனர். கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி உள்ளது.
இந்த போட்டியை பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லெஸ் ஆகியோர் ஒன்றாக பார்க்க இருக்கின்றனர் என நேற்று அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று வெளியிடப்பட்டது. இந்திய அணிக்கு பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், சிவசேனா (உத்தவ் தாக்கரே) தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் பேசும்போது, நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் சாம்பியன்ஷிப்பிற்கான மோதலானது, ஒரு கிரிக்கெட் போட்டி என்றில்லாமல், காவி கட்சியின் நிகழ்ச்சியை போன்று தோற்றமளிக்கிறது என கூறியுள்ளார்.
உலக கோப்பை இறுதி போட்டியில் பிரதமர் மோடி பந்துவீசுவது போலவும், அமித்ஷா பேட்டிங் செய்வது போலவும் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் எல்லையை கவனிப்பது போலவும் காணப்படுகிறது என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், இந்தியா உலக கோப்பை கிரிக்கெட்டில் வெற்றி பெற்று, கோப்பையை தட்டி சென்றது. ஏனெனில், பிரதமர் மோடி போட்டியை பார்க்க கலந்து கொண்டார் என்று கூற கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நாட்டில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்றும் கூறியுள்ளார்.