நகைக்கடை உரிமையாளர் கொலையில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை; கீழ்கோர்ட்டு தீர்ப்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது
|நகைக்கடை உரிமையாளர் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த கீழ் கோர்ட்டு தீர்ப்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது.
பெங்களூரு:
நகைக்கடை உரிமையாளர் கொலை
தார்வார் மாவட்டம் உப்பள்ளியை சேர்ந்தவர் ராமதாஸ் குடல்கர். இவர் அந்த பகுதியில் சொந்தமாக நகைக்கடை நடத்தி வந்தார். இதேபோல் அந்த பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். தொழிலாளி. சந்தோஷ், ராமதாஸ் குடல்கரிடம் கடனாக ரூ.60 ஆயிரம் வாங்கி இருந்தார். கடனை திருப்பி தருமாறு ராமதாஸ் குடல்கர், கேட்டு வந்துள்ளார். ஆனால் சந்தோஷ் கடனை கொடுக்காமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று கடன் தொடர்பாக இருவருக்கும் இடையே நகைக்கடையில் வைத்து தகராறு ஏற்பட்டது. அந்த சமயத்தில் ஆத்திரமடைந்த சந்தோஷ், ராமதாஸ் குடல்கரை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
ஆயுள்தண்டனை
எனினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக உப்பள்ளி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தார்வார் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
அப்போது நீதிபதி, நகைக்கடைகாரரை அடித்து கொலை செய்தது உறுதியானதால் சந்தோசுக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். அந்த உத்தரவை எதிர்த்து சந்தோசின் மனைவி சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
ஐகோர்ட்டு உறுதி செய்தது
அதன் மீதான விசாரணை நடைபெற்றது. இதன் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில் சந்தோஷ் தாக்கியதில் ராமதாஸ் குடல்கர் உயிரிழந்து உள்ளார். போலீஸ் விசாரணையிலும் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே நகைக்கடை உரிமையாளர் கொலை வழக்கில் சந்தோசுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தார்வார் கோர்ட்டின் உத்தரவு செல்லும் என கூறி தீர்ப்பு வழங்கினார்.