கர்நாடக புதிய மந்திரிகள் பற்றிய வாழ்க்கை குறிப்பு
|புதிய மந்திரிகளின் வாழ்க்கை குறிப்பை இங்கே காண்போம்.
பெங்களூரு:
புதிய மந்திரிகளின் வாழ்க்கை குறிப்பை இங்கே காண்போம்.
மந்திரிசபை விரிவாக்கம்
கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. அதையடுத்து கடந்த 20-ந் தேதி முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் பதவி ஏற்றனர்.
மேலும் 8 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். இந்த நிலையில் நேற்று கர்நாடக கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் நடந்தது. இதில் புதிதாக 24 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். அவர்கள் பற்றியும், அவர்களது பின்புலம் பற்றியும் சில விவரங்கள் பின்வருமாறு:-
அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர்
1.எச்.கே.பட்டீல்:- காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், அரசியலில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். 69 வயதான இவர் கதக் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவர் ஏற்கனவே ஜவுளித்துறை, நீர் ஆதாரங்கள், விவசாயம் சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள், கிராமப்புற மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் ஆகிய துறைகளை நிர்வகித்த அனுபவம் உள்ளது. இவர் அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரது தந்தை கே.எச்.பட்டீலும் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2.கிருஷ்ண பைரேகவுடா:- கர்நாடக சட்டசபைக்கு கோலார் மாவட்டத்தில் உள்ள வேம்கல் தொகுதியில் இருந்து 2 முறையும், பெங்களூருவில் உள்ள பேடராயனபுரா தொகுதியில் இருந்து 3 முறையும் என மொத்தம் 5 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வாகி உள்ளார். இவர் ஏற்கனவே கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், விவசாயம், சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் ஆகிய துறைகளை நிர்வகித்து இருக்கிறார். இவர் அமெரிக்காவில் உள்ள அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.(சர்வதேச விவகாரங்கள்) பட்டம் பெற்றவர் ஆவார்.
3.செலுவராயசாமி:- இவர் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலின்போது ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து காங்கிரசுக்கு வந்தவர் ஆவார். இவர் அப்போது நடந்த தேர்தலில் தோற்றார். ஆனாலும் இவர் மண்டியா மாவட்டம் நாகமங்களா தொகுதியில் இருந்து 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வாகி உள்ளார். 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினரான இவர் 2013-ம் ஆண்டு எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் நாகமங்களா தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர்
4.வெங்கடேஷ்:- இவர் மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வானவர் ஆவார். 75 வயதான இவர் முன்பு ஜனதா தளம் கட்சியில் இருந்தார். பின்னர் காங்கிரசில் சேர்ந்த இவர் 2013-ம் ஆண்டு எம்.எல்.ஏ. ஆனார். 2018-ம் ஆண்டு இவர் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் கே.மகாதேவாவிடம் தோல்வியை தழுவினார். பின்னர் நடந்து முடிந்த தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் பிரியப்பட்டணா தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.
5.எச்.சி.மகாதேவப்பா:- டாக்டரான எச்.சி.மகாதேவப்பா ஜே.ஜே.எம். மருத்துவக்கல்லூரியில் பயின்றவர். இவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆவார். 70 வயதான எச்.சி.மகாதேவப்பா டி.நரசிப்புரா ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தவர் ஆவார். இவர் ஏற்கனவே சித்தராமையா தலைமையிலான மந்திரிசபையில் பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
6.ஈஸ்வர் கன்ட்ரே:- கர்நாடக மாநில காங்கிரஸ் செயல் தலைவராக உள்ள இவர் அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரது தந்தை பீமண்ணா கன்ட்ரே மந்திரியாக இருந்துள்ளார். 61 வயதான ஈஸ்வர் கன்ட்ரே பீதர் மாவட்டம் பால்கி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வானவர். என்ஜினீயரான இவர் இதுவரை 4 முறை எம்.எல்.ஏ.வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
புகழ்பெற்ற குடும்பம்
7.தினேஷ் குண்டுராவ்:- கர்நாடக மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவரான இவர் கர்நாடகத்தில் புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை குண்டுராவ் 1980-ம் ஆண்டு முதல் 1983-ம் ஆண்டு வரை கர்நாடக முதல்-மந்திரியாக இருந்தார். என்ஜினீயரான இவர் பி.எம்.எஸ். கல்லூரியில் படித்தவர் ஆவார். தோல்வியையே சந்திக்காமல் இதுவரை தொடர்ந்து 6-வது முறையாக தினேஷ் குண்டுராவ் எம்.எல்.ஏ.வாகி உள்ளார். 2015-2016-ம் ஆண்டு காலக்கட்டத்தில் இவர் உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரியாக பணியாற்றினார்.
8.கியாத்தசந்திரா என்.ராஜண்ணா:- 72 வயதான இவர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் ஆவார். வக்கீலுக்கு படித்துள்ள இவர் விவசாயமும் செய்து வருகிறார். இதற்கு முன்பு இவர் 2013-ம் ஆண்டு மதுகிரி தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
9.சரணபசப்பா தர்ஷனப்பூர்:- யாதகிரி மாவட்டம் சதாப்பூர் தொகுதியில் இருந்து 5 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வாகி இருக்கும் இவர் சிவில் என்ஜினீயர் ஆவார். தற்போது இவருக்கு 62 வயது ஆகிறது. இவரது தந்தை பாபுகவுடா தர்ஷனப்பூர் சதாப்பூர் தொகுதியில் இருந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வானவர் ஆவார். மேலும் அவர் மந்திரியாகவும் பணியாற்றி இருக்கிறார்.
மூத்த அரசியல்வாதியின் மகன்
10.சிவானந்த் பட்டீல்:- இவர் பசவனபாகேவாடி தொகுதியில் இருந்து 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வாகி இருக்கிறார். கடந்த 2018-2019-ம் ஆண்டில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் இவர் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியாக பணியாற்றினார்.
11.ஆர்.பி.திம்மாப்பூர்:- இவர் முதோல் தொகுதியில் இருந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வாகி இருக்கிறார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் பா.ஜனதா மந்திரியாக இருந்த கோவிந்த் கார்ஜோளை வீழ்த்தி சட்டசபைக்கு வந்துள்ளார். இதற்கு முன்பு திம்மாப்பூர் சர்க்கரை, துறைமுகம் மற்றும் உள்நாட்டு போக்குவரத்து துறைகளை நிர்வகித்துள்ளார்.
12.எஸ்.எஸ்.மல்லிகார்ஜூன்:- கல்வியாளரான இவர் தாவணகெரே வடக்கு தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வானவர். இவர் மூத்த காங்கிரஸ் தலைவரும், மூத்த அரசியல்வாதியுமான சாமனூர் சிவசங்கரப்பாவின் மகன் ஆவார். சாமனூர் சிவசங்கரப்பாவும் தாவணகெரே தெற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகி உள்ளார். அவர் தாவணகெரேவில் உள்ள பிரசித்திபெற்ற எஸ்.எஸ். மருத்துவக்கல்லூரியின் தலைவர் ஆவார்.
டி.கே.சிவக்குமாருக்கு நெருக்கமானவர்
13.சிவராஜ் சங்கப்பா தங்கடகி:- 52 வயதான இவர் கொப்பல் மாவட்டம் கனககிரி தொகுதியில் இருந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வானவர் ஆவார்.
14.சரணபிரகாஷ் பட்டீல்:- டாக்டரான இவர் கலபுரகி மாவட்டம் சேடம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வாகி உள்ளார். இவர் அத்தொகுதியில் இருந்து 4-வது முறையாக எம்.எல்.ஏ.வாகி இருக்கிறார்.
15.மன்கல் எஸ்.வைத்யா:- இவர் கர்நாடக கடலோர மாவட்டமான உத்தரகன்னடா மாவட்டம் பட்கல்-ஒன்னாவர் தொகுதியில் இருந்து 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வாகி இருக்கிறார்.
16.லட்சுமி ஹெப்பால்கர்:- இவர், பெலகாவி மாவட்டம் பெலகாவி புறநகர் தொகுதியில் இருந்து 2 முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வாகி இருக்கிறார். 48 வயதான இவர் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார்.
17.ரஹீம் கான்:- பீதர் மாவட்டம் பீதர் வடக்கு தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வாகி இருக்கும் இவர், ஏற்கனவே காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் விளையாட்டு, இளைஞர் மேம்பாட்டு துறை மந்திரியாக பணியாற்றி இருக்கிறார்.
கட்சி மேலிடத்தின் அழுத்தம்...
18.டி.சுதாகர்:- 62 வயதான இவர் சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தொகுதியில் இருந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வாகி இருக்கிறார். இவர் 2008-2009-ம் ஆண்டில் சமூக நலத்துறை மந்திரியாகவும் பணியாற்றி உள்ளார்.
19.சந்தோஷ் லாட்:- தார்வார் மாவட்டம் கல்கட்டகி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாகி இருக்கும் இவர் பி.காம் பட்டதாரி ஆவார். 48 வயதான இவர் தொழில் அதிபர் ஆவார். இவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார்கள்.
20.என்.எஸ்.போசராஜு:- காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரான இவர் கர்நாடக சட்டசபை உறுப்பினரோ, எம்.எல்.சி.யோ அல்ல. இவர் காங்கிரஸ் மேலிடத்திற்கு நெருக்கமானவர் ஆவார். இவருக்கு கடைசி நேரத்தில் தான் மந்திரி பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு கட்சி மேலிடத்தின் அழுத்தம் காரணமாக இவருக்கு மந்திரி பதவி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
21.பைரதி சுரேஷ்:- பெங்களூரு ஹெப்பால் தொகுதியில் இருந்து 2 முறை எம்.எல்.ஏ.வான பைரதி சுரேஷ் என்கிற சுரேஷா பி.எஸ்., முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு மிகவும் நெருக்கமானவர். 2012-ம் ஆண்டு எம்.எல்.சி.யாக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய பைரதி சுரேஷ் தற்போது மந்திரியாகி உள்ளார். இவரது மனைவி பைரதி பத்மாவதி 2019-ம் ஆண்டு ஒசக்கோட்டை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் ஆவார்.
அண்ணனை தோற்கடித்தவர்
22.மது பங்காரப்பா:- இவர் மறைந்த முன்னாள் மந்திரி எஸ்.பங்காரப்பாவின் மகன் ஆவார். இவர் முன்பு ஜனதா தளம்(எஸ்) கட்சியில் அங்கம் வகித்தார். பின்னர் காங்கிரசில் சேர்ந்தார். 56 வயதான இவர் சிவமொக்கா மாவட்டம் சொரப் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட தனது சொந்த அண்ணன் குமார் பங்காரப்பாவை தோற்கடித்து சட்டசபைக்குள் நுழைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
23.எம்.சி.சுதாகர்:- சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வானவர் எம்.சி.சுதாகர். 54 வயதான இவர் பல் டாக்டரும் ஆவார். இவர் 3-வது முறையாக இந்த தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வாகி உள்ளார்.
24.நாகேந்திரா:- பல்லாரி மாவட்டம் பல்லாரி புறநகர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வாகி இருப்பவர் நாகேந்திரா. இவர் பா.ஜனதாவில் சக்தி வாய்ந்த தலைவராக திகழும் ஸ்ரீராமுலுவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இதனால் இவரை 'ஜெயின்ட் கில்லர்'(அதாவது மாபெரும் கொலையாளி) என்று காங்கிரசார் அழைக்கிறார்கள்.