நம்பிக்கையுடன் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் நுழைவோம் - பிரதமர் மோடி
|புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் புதிய நம்பிக்கையுடன் நுழைவோம். பழைய கட்டிடத்திடம் இருந்து உணர்ச்சி பெருக்குடன் விடைபெறுகிறோம் என்று மக்களவையில் பிரதமர் பிரதமர் தெரிவித்தார்.
சிறப்பு கூட்டத்தொடர்
5 நாட்கள் கொண்ட நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. இந்த கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல்நாள், பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்த கூட்டம், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடக்கிறது. இத்தொடரில், நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் பற்றி விவாதம் நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
தலைமை தேர்தல் கமிஷனர்கள், தேர்தல் கமிஷனர்கள் நியமன மசோதா, வக்கீல்கள் சட்ட திருத்த மசோதா, அஞ்சல் நிலைய சட்ட திருத்த மசோதா உள்பட 4 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.
75 ஆண்டுகால பயணம்
அதன்படி, நேற்று நாடாளுமன்ற மக்களவையில், நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்து விவாதம் நடந்தது. விவாதத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார்.
அவர் பேசியதாவது:-
இன்று நம்மை கடந்த காலத்துடன் பிணைத்துக் கொள்ளும் நாள். வரலாற்று சிறப்புமிக்க நினைவுகளுடன் இந்த கட்டிடத்தில் இருந்து விடை பெறுகிறோம். சுதந்திரத்துக்கு முன்பு, இந்த கட்டிடம் இம்பீரியல் சட்ட மேலவை என்று அழைக்கப்பட்டது. சுதந்திரத்துக்கு பிறகு, நாடாளுமன்றம் என்று அழைக்கப்பட்டது.
இந்தியர்களின் வியர்வை
இந்த கட்டிடத்தை வெளிநாட்டு ஆட்சியாளர்கள் கட்டி இருக்கலாம். ஆனால், இந்தியர்களின் வியர்வை, கடின உழைப்பு, பணம் ஆகியவற்றால் இது கட்டப்பட்டது. இங்குள்ள ஒவ்வொரு செங்கல்லையும் நான் வணங்குகிறேன். பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில், சுதந்திரம் பெற்ற நள்ளிரவில் பண்டித நேரு பேசினார். அவரது வார்த்தைகள் ஒவ்வொருவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன. பிரதமர் பதவியில் இருந்தபோது, நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோர் மறைந்த துயர சம்பவத்தை இந்த கட்டிடம் சந்தித்துள்ளது.
ஜனநாயகம் மீது தாக்குதல்
அவசரநிலை காலத்தில் ஜனநாயகம் மீதான தாக்குதலை இச்சபை பார்த்தது. இதே சபை மூலமாக மக்கள் தங்கள் ஓட்டு வலிமைைய பயன்படுத்தி, ஜனநாயகத்தை மீண்டும் கொண்டு வந்தனர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில், ஜார்கண்ட், சத்தீஷ்கார், உத்தரகாண்ட் ஆகிய 3 புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது, அங்கெல்லாம் கொண்டாட்டம் நடந்தது. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், தெலுங்கானா பிரிக்கப்பட்டபோது கசப்புணர்வும், ரத்தக்களறியும் ஏற்பட்டது. ஓட்டுக்கு லஞ்சம் என்ற ஊழலையும் இந்த கட்டிடம் கண்டது. வங்காளதேச விடுதலைக்கு ஆதரவு அளித்தது.
370-வது பிரிவு நீக்கம்
பல பத்தாண்டுகளாக நிலுவையில் இருந்த பிரச்சினைகள், இச்சபையில் தீர்வு காணப்பட்டன. 370-வது பிரிவு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி அமலாக்கம், நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு ஆகியவற்றை இச்சபை எப்போதும் நினைவுகூரும். சுதந்திரம் ெபற்ற காலத்தில் இருந்து இதுவரை இரு அவைகளிலும் மொத்தம் 7 ஆயிரத்து 500-க்கு மேற்பட்ட எம்.பி.க்கள் பணியாற்றி உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த பாரம்பரிய கட்டிடத்தின் கடைசி நாளை அர்ப்பணிப்போம்.
140 கோடி இந்தியர்களின் வெற்றி
ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினோம். ஒவ்வொருவரும் கொண்டாடுவதற்கு அதில் ஏதோ ஒன்று இருக்கிறது. மாநாட்டின் வெற்றி, எந்த தனிப்பட்ட நபருக்கோ, கட்சிக்கோ சொந்தமல்ல. 140 கோடி இந்தியர்களுக்கும் சொந்தமானது. உலக அளவில் இந்தியா தனது இடத்தை பதித்துள்ளது. உலக நண்பனாக ஏற்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக பார்க்கிறது. அதன் நட்புறவை அனுபவிக்கிறது. 'அனைவரையும் அரவணைத்து அனைவருக்கும் வளர்ச்சி' என்ற நமது தாரக மந்திரம், உலகத்தை ஒன்றுபடுத்த உதவுகிறது.
புதிய நம்பிக்கை
நாளை நாம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் நுழையலாம். இருப்பினும், பழைய கட்டிடம், இனிவரும் தலைமுறைகளுக்கும் உத்வேகம் அளிக்கும். பழைய கட்டிடத்திடம் இருந்து விடைபெறுவது மிகவும் உணர்ச்சிகரமான தருணம் ஆகும். புதிய நம்பிக்கையுடன் புதிய கட்டிடத்தில் நுழைவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.