< Back
தேசிய செய்திகள்
சஞ்சய் ராவத், சல்மான் கானுக்கு லாரன்ஸ் கும்பல் கொலை மிரட்டல்; ஒருவர் கைது
தேசிய செய்திகள்

சஞ்சய் ராவத், சல்மான் கானுக்கு லாரன்ஸ் கும்பல் கொலை மிரட்டல்; ஒருவர் கைது

தினத்தந்தி
|
1 April 2023 12:12 PM IST

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவை போல் கொல்வோம் என சிவசேனாவின் (உத்தவ் அணி) எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மிரட்டல் விடுத்து உள்ளது.

புனே,

மராட்டியத்தில் சிவசேனாவின் (உத்தவ் தாக்கரே அணி) நாடாளுமன்ற மேலவை எம்.பி.யாக இருந்து வருபவர் சஞ்சய் ராவத். இந்நிலையில், அவருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தரப்பிடம் இருந்து கொலை மிரட்டல் வந்து உள்ளது.

இதுபற்றி சஞ்சய் ராவத் எம்.பி. போலீசில் புகார் அளித்து உள்ளார். புகாரை பெற்று கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மிரட்டல் பற்றி வெளியான செய்தியில், டெல்லியில் என்னை வந்து சந்தித்து பார். ஏ.கே.-47 ரக துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படுவாய்.

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவுக்கு நேர்ந்த கதி உனக்கும் ஏற்படும் என சஞ்சய் ராவத் எம்.பி.க்கு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. நடிகர் சல்மான் கானும் கொல்லப்படுவார் என அந்த மிரட்டல் செய்தி தெரிவிக்கிறது.

பத்ரா சாவல் நில ஊழல் வழக்கில் அமலாக்க துறை, கடந்த ஆண்டு ஆகஸ்டில் சஞ்சய் ராவத்திடம் 6 மணிநேரம் விசாரணை மேற்கொண்டு பின்னர் அவரை கைது செய்து இருந்தது.

சஞ்சய் ராவத் எம்.பி. கூறும்போது, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான இந்த அரசு பதவிக்கு வந்த பின்னர், எங்களுடைய தலைவர்களின் பாதுகாப்பு குறைக்கப்பட்டு விட்டது.

இதுபற்றி ஒருபோதும் நான் கடிதம் எழுதவில்லை. ஆனால், முதல்-மந்திரியின் மகன் எங்களை கொல்ல குண்டர்களுடன் சேர்ந்து கொண்டு மீண்டும் சதி திட்டம் தீட்டி வருகிறார். இதுபற்றி உள்துறை அமைச்சகத்துக்கு நாங்கள் தகவல் அனுப்பினால், அவர்கள் இதனை நாடகம் என கூறுகின்றனர் என்று ராவத் கூறியுள்ளார்.

இந்த நிலையில், சந்தேகத்திற்குரிய ஒரு நபரை புனே போலீசார் கைது செய்து உள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்