'2024-ல் மோடி அரசிடம் இருந்து மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வோம்' - மல்லிகார்ஜுன கார்கே
|அமிர்த காலத்தை விட தற்போது கல்வியின் காலமே இந்தியாவிற்கு தேவை என்றும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
2024-ம் ஆண்டில் மோடி அரசிடம் இருந்து மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வோம் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆண்டு கல்வி அறிக்கையின்படி, 14 முதல் 18 வயது வரை உள்ள கிராமப்புற மாணவர்களில் 56.70% பேருக்கு மூன்றாம் வகுப்பு கணக்குகளைப் போட முடிவதில்லை. 26.50% பேருக்கு தங்கள் தாய்மொழியில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களை சரளமாக படிக்க முடிவதில்லை. 17 வயது முதல் 18 வயது வரை உள்ள இளைஞர்களில் 25% பேர் ஆர்வமின்மை காரணமாக கல்வி கற்பதை நிறுத்திவிடுகிறார்கள். 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு தினசரி பயன்பாட்டில் உள்ள கணக்குகளைக் கூட போட முடிவதில்லை.
பெரும்பாலான கற்றல் குறியீடுகள் கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு முந்தைய காலத்தைவிட மோசமாக உள்ளது. அமிர்த காலத்தை விட தற்போது கல்வியின் காலமே இந்தியாவிற்கு தேவையானதாகும். 2024-ம் ஆண்டில் மோடி அரசிடம் இருந்து மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வோம்."
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.