< Back
தேசிய செய்திகள்
உலக நலனுக்காக சீனாவை அழிப்போம்; மத்திய பிரதேசத்தில் தொடங்கிய மந்திர, தந்திர வேலைகள்
தேசிய செய்திகள்

உலக நலனுக்காக சீனாவை அழிப்போம்; மத்திய பிரதேசத்தில் தொடங்கிய மந்திர, தந்திர வேலைகள்

தினத்தந்தி
|
28 Dec 2022 1:00 PM GMT

உலக நலனுக்காக சீனாவை அழிப்போம் என்று கூறி மத்திய பிரதேசத்தில் மந்திர, தந்திர வேலைகளுக்கான பிரசாரம் தொடங்கியுள்ளன.



போபால்,


மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் நாடு தழுவிய அளவிலான பிரசாரம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. ராஷ்டீரிய சுரக்ஷா ஜக்ரான் மஞ்ச் என்ற பெயரிலான நாட்டை பாதுகாப்பதற்கான இந்த பிரசாரம் போபால் நகரின் ரவீந்திர பவனில் தொடங்கி உள்ளது.

இதன்படி, உலக நலன்களை முன்னிட்டு மந்திர, தந்திரங்களை பயன்படுத்தி சீனாவை அழிக்கும் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பிரசாரத்தில் மத்திய பிரதேசத்தின் முன்னாள் டி.ஜி.பி.யான எஸ்.கே. ராவத் மற்றும் ஓய்வு பெற்ற கர்னல் பாரத் பூஷன் வாத்ஸ், ராஷ்டீரிய சுரக்ஷா ஜக்ரான் மஞ்சின் தேசிய பொது செயலாளர் கோலக் பீஹாரி ராய், தெற்காசிய படிப்புகளுக்கான பண்டிதரான பேராசிரியர் ராமேஷ்வர் மிஷ்ரா பங்கஜ் மற்றும் வரலாற்றாசிரியரான ரமேஷ் சர்மா உள்ளிட்டோர் இணைந்து உள்ளனர்.

இதுபற்றி ராய் கூறும்போது, தீங்கு மற்றும் எதிர்மறை சக்திகளை அழிப்பதற்காக இந்தியா மற்றும் உலகின் பல நாடுகளில் இதுபோன்ற மந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பழமையான இந்தியாவின் வடகிழக்கு பகுதிகள் இதற்கான முக்கிய மையங்களாக உள்ளன.

போபாலில் நாங்கள் தொடங்கிய இந்த பிரசாரம் உலகம் முழுவதும் நடத்தப்படும். மக்கள் இந்த பிரசாரத்தில் மந்திரங்களை உச்சரித்து பங்கேற்கலாம்.

அவர்கள் தங்களது வீடுகள், காலனிகளில் வசித்தபடியே இதனை மேற்கொள்ளலாம். இந்த பிரசாரம் ஆனது, மாந்திரீக நிபுணர்கள், மகாவித்யா நிபுணர்கள், நாட்டின் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தேசப்பற்றாளர்கள் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தந்திர மாநாடுகள், யந்திராக்ய மாநாடுகள், மந்திர ஜெபங்கள் உள்பட பல்வேறு விசயங்கள் மேற்கொள்ளப்படும். இந்த முறை வழியே தேசப்பற்று உணர்வு மற்றும் மனிததன்மை விழித்தெழ செய்யப்படும்.

இதில், தேசப்பற்று அமைப்புகள், பண்டிதர்கள், நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், விவசாயிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் இணைந்து ஆதரவளிக்க வேண்டும். மந்திரங்களை உச்சரியுங்கள். இது மிக எளிமையான மற்றும் திறன் வாய்ந்த தீர்வாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்