< Back
தேசிய செய்திகள்
டெல்லி நோக்கிய பேரணியை தொடருவோம்; ராகுல் காந்தியை சந்தித்த விவசாயிகள் பரபரப்பு பேட்டி
தேசிய செய்திகள்

டெல்லி நோக்கிய பேரணியை தொடருவோம்; ராகுல் காந்தியை சந்தித்த விவசாயிகள் பரபரப்பு பேட்டி

தினத்தந்தி
|
24 July 2024 11:57 AM GMT

நாடு முழுவதும் விவசாய அமைப்புகள் ஆகஸ்டு 15-ந்தேதி டிராக்டர் பேரணியை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற இல்ல வளாகத்தில், தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா, பஞ்சாப், அரியானா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஒரு குழுவாக சென்று, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை இன்று நேரில் சந்தித்து பேசினர். இந்த குழுவில் விவசாய தலைவர்கள் 12 பேர் இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால், முன்னாள் பஞ்சாப் முதல்-மந்திரி சரண்ஜித் சிங், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சிங் ஆகியோர் உடன் இருந்தனர். இதேபோன்று அக்கட்சியின் பிற தலைவர்களான சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, குர்ஜித் சிங் ஆஜ்லா, தரம்வீர் காந்தி, அமர் சிங், தீபேந்தர் சிங் ஹூடா மற்றும் ஜெய் பிரகாஷ் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பில், தங்களுடைய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களை பற்றி அவர்கள் ராகுல் காந்தியிடம் எடுத்துரைத்தனர். இந்த சந்திப்புக்கு முன் நாடாளுமன்ற இல்ல வளாகத்திற்குள் நுழைய விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதுபற்றி ராகுல் காந்தி கூறும்போது, விவசாயிகளை உள்ளே வரும்படி நாங்கள் அழைத்தோம். ஆனால், அவர்களை உள்ளே வரவிடவில்லை. அவர்கள் விவசாயிகள். அதனால், அப்படி நடந்திருக்கலாம். இதற்கான காரணம் பற்றி நீங்கள் பிரதமரிடமே கேட்க வேண்டும் என்று கூறினார்.

இந்நிலையில், விவசாயிகளில் ஒருவரான ஜெகஜித் சிங் தல்லேவால் செய்தியாளர்களிடம் கூறும்போது, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து மத்திய அரசு தவறி விட்டது. சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்த வேண்டியது கட்டாயம். நாங்கள் டெல்லி நோக்கிய பேரணியை தொடருவோம் என்று கூறினார்.

இந்த சந்திப்பில், அவர்களின் நீண்டகால கோரிக்கையான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி.) திருத்தியமைக்க வேண்டும் என கோரி வரும் அவர்கள், அதற்காக ஒரு தனிநபர் மசோதாவை அறிமுகம் செய்ய வேண்டுமென்று ராகுல் காந்தியை கேட்டு கொண்டனர்.

சுவாமிநாதன் ஆணையத்தின் அடிப்படையில், பயிர் விலை சரிவை சந்திப்பதில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க, கொள்முதல் உத்தரவாதம் ஒன்றை அரசு வழங்க வேண்டும் என்றும் இதற்காக, எம்.எஸ்.பி.யை கொண்டு வரவேண்டும் என்றும் நாடு முழுவதுமுள்ள விவசாய அமைப்புகள் விருப்பம் தெரிவித்து உள்ளன.

இதனை வலியுறுத்தி, கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி நோக்கி டிராக்டர்களில் பேரணியாக சென்றனர். இதனால், டெல்லியின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விவகாரம், சர்வதேச அளவில் தலைப்பு செய்திகளாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்லியில் பல மாதங்களாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை அரசு வாபஸ் பெற்றது.

இதன்பின் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் கடந்த பிப்ரவரியில் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பல முக்கிய மாநிலங்களில் பா.ஜ.க. தோல்வியை சந்திக்க நேர்ந்தது.

இந்த சூழலில், 5 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையிலான எம்.எஸ்.பி. சலுகையை அரசு அறிவித்தபோதும், விவசாயிகள் அதனை நிராகரித்து விட்டனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிப்போம் என விவசாய அமைப்புகள் கடந்த திங்கட்கிழமை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று நாடு முழுவதும் டிராக்டர் பேரணியை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்