நேதாஜியின் கனவை முன்னெடுத்து சென்று நிறைவேற்றுவோம்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு
|நேதாஜியின் கனவை முன்னெடுத்து சென்று நிறைவேற்றுவோம் என பேரணியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.
கொல்கத்தா,
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 126-வது ஆண்டு பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது. சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஜனவரி 23-ந்தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு, நாட்டின் உயரிய பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் மோடி சூட்டியுள்ளார்.
அவரது பிறந்த நாளை முன்னிட்டு மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஷாகித் மினார் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் இன்று பேரணி நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது, நாட்டுக்கான அவரது தியாகத்தினால் இந்தியர்கள் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதனால், அவரது கனவை இந்தியர்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும்.
நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற மொத்த விருப்பங்களையும் அவர் வழங்கியிருக்கிறார் என்று மோகன் பகவத் பேசியுள்ளார். எனினும், கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு ஆர்.எஸ்.எஸ். விழா எடுக்க நேதாஜியின் மகள் அனிதா போஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும் என்ற நேதாஜியின் போதனையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜ.க.வும் பிரதிபலிக்கவில்லை. நேதாஜி பக்தியான இந்துவாக இருந்தபோதும், பிற மதங்களை மதிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் மத்தியில் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புக்கு அவர் ஆதரவாக இருந்தார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜ.க.வும் இந்த அணுகுமுறையை பிரதிபலிக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் இரு தரப்பிலும் ஒரு எளிய முத்திரையை வைக்க விரும்பினால், அவர்கள் வலதுசாரிகள்; நேதாஜி ஒரு இடதுசாரி என்று செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர்கூறியுள்ளார்.