ஊழல் தடுப்பு படையை ஒழித்துவிட்டு லோக்அயுக்தாவை அமல்படுத்துவோம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
|ஊழல் தடுப்பு படையை ஒழித்துவிட்டு லோக்அயுக்தாவை அமைப்போம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
ஊழல் தடுப்பு படை கலைப்பு
கர்நாடகத்தில் லோக்அயுக்தா அமைப்பு மிக பலமாக இருந்தது. அந்த அமைப்பில் இருந்த போலீசார் சொத்து குவிப்பு புகாருக்கு ஆளான அரசு அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர். ஊழல் அதிகாரிகளுக்கு அந்த அமைப்பு சிம்மசொப்பனமாக இருந்தது. இதனால் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லோக்அயுக்தாவை கண்டு பயந்து நடுங்கினர்.
இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, திடீரென ஊழல் தடுப்பு தடை தோற்றுவிக்கப்பட்டது. இதன் மூலம் லோக்அயுக்தாவின் அதிகாரம் முடக்கப்பட்டது. அந்த அமைப்பு ஒரு பல் இல்லாத பாம்பு போல் மாறியது.
இதையடுத்து கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. அதில் மாநில அரசால் தோற்றுவிக்கப்பட்ட ஊழல் தடுப்பு படையை கலைத்து 2016-க்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என்று கோர்ட்டு கூறியது. கர்நாடக வரலாற்றில் இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக கருதப்படுகிறது.
உறுதியாக உள்ளோம்
இந்த விஷயத்தில் பா.ஜனதா அரசு ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அந்த கூட்டத்திற்கு பிறகு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எனது தலைமையில் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் ஊழல் தடுப்பு படையை கலைத்து ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள தீர்ப்பு குறித்து விவாதித்தோம். கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது பா.ஜனதா வெளியிட்ட தனது தேர்தல் அறிக்கையில், ஊழல் தடுப்பு படையை ஒழித்துவிட்டு லோக்அயுக்தாவை பலப்படுத்துவோம் என்று கூறியுள்ளோம்.
அந்த தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஆனால் அந்த தீர்ப்பில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை படிக்க வேண்டியுள்ளது. அதுகுறித்து ஆய்வு செய்து அடுத்தக்கட்டமாக என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் சட்டத்துறை மற்றும் அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளோன்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
ஊழல் தடுப்பு படை தொடர்பான கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பு குறித்து சட்டத்துறை மந்திரி மாதுசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வாதிடுவது வழக்கம்
கர்நாடகத்தில் ஊழல் தடுப்பு படையை கலைத்து ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த படையை ரத்து செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறினோம். இது தொடர்பாக வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருந்ததால் நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனேயே முடிவு எடுக்க முடியவில்லை. இப்போது கோர்ட்டே தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பு எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிக்கு இசைவு அளிப்பதாக உள்ளது.
பா.ஜனதா அளித்த வாக்குறுதியில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஐகோர்ட்டு தீர்ப்பை எவ்வாறு அமல்படுத்துவது என்பது குறித்து ஆலோசிப்போம். தீர்ப்பை முழுமையாக ஆராய வேண்டும். இது சுலபமான பணி அல்ல. அரசு வழக்கு எதுவாக இருந்தாலும், அந்த வழக்கில் அரசு தனக்கு ஆதரவாக வாதிடுவது வழக்கம். அவ்வாறு தான் இந்த வழக்கிலும் அரசு ஊழல் தடுப்பு படையை ஆதரித்து வாதங்களை எடுத்து வைத்தது.
நியாயமற்றது
சித்தராமையா ஆட்சியில் எடுத்த முடிவாக இருந்தாலும், கோர்ட்டில் ஒரு அரசாக அதை ஆதரித்து இருக்கிறோம். தீர்ப்பில் ஊழல் தடுப்பு படையே கலைக்கப்பட்டுள்ளது. அதை லோக்அயுக்தாவுடன் இணைப்பது, லோக்அயுக்தாவிற்கு அதிகாரம் வழங்குவது போன்ற அம்சங்களும் தீர்ப்பில் உள்ளன. அந்த சில அம்சங்கள் நியாயமற்றதாக உள்ளது. இந்த விஷயங்களை கோர்ட்டு கூறலாமா? என்பது போன்ற விஷயங்கள் குறித்து ஆலோசிக்க வேண்டியுள்ளது.
ஊழல் தடுப்பு படையில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளை எங்கு அனுப்புவது, அதிகாரிகள் நிலை, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது, இவற்றை கவனிக்க யாரை நியமனம் செய்வது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது. அரசு ஆழமாக ஆலோசித்து உரிய முடிவு எடுக்கும்.
இவ்வாறு மாதுசாமி கூறினார்.