மத்திய அரசின் செயலை நாடாளுமன்ற தேர்தலில் மக்களிடம் கொண்டு செல்வோம் -சிவலிங்கேகவுடா பேச்சு எம்.எல்.ஏ. பேச்சு
|வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அன்ன பாக்ய திட்டத்திற்கு கூடுதல் அரிசி வழங்க மறுத்த மத்திய அரசின் செயலை மக்களிடம் கொண்டு செல்வோம் என்று சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் சிவலிங்கேகவுடா கூறினார்.
பெங்களூரு:-
மத்திய அரசு குறுக்கீடு
கர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 3-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றினார். அதைத்தொடர்ந்து கடந்த 7-ந் தேதி கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி சித்தராமையா தாக்கல் செய்தார். இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் 9-வது நாள் கூட்டம் நேற்று காலை பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் ஆளும் காங்கிரஸ் உறுப்பினர் சிவலிங்கேகவுடா பேசும்போது கூறியதாவது:-
மத்திய அரசின் தேசிய உணவு கழக கிடங்குகளில் அதிகளவில் அரிசி இருப்பு வைக்கப்பட்டுள்து. மாநில அரசு பணம் கொடுப்பதாக கூறியும், அரிசி வழங்க முடியாது என்று கூறிவிட்டனர். ஏழைகள் பயன்பெறும் திட்டங்களுக்கு மத்திய அரசு குறுக்கீடு செய்கிறது. பணக்காரர்களுக்கு பணம் வழங்குவதை விட ஏழைகளுக்கு வழங்கினால் அது செலவிடப்படும். அதன் மூலம் அரசுக்கு வரி வருவாய் கிடைக்கும். ஏழைகளும் முன்னேற்றம் அடைவார்கள்.
பாடம் புகட்டுவார்கள்
அன்ன பாக்ய திட்டத்திற்கு கூடுதல் அரிசி வழங்க மறுக்கும் மத்திய அரசு வருகிற நாட்களில் அதன் பின் விளைவுகளை எதிர்கொள்ளும். நாம் கூட்டாட்சி தத்துவத்தில் இருக்கிறோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு சிவலிங்கேகவுடா கூறினார்.
அவர் பேசும்போது பா.ஜனதா உறுப்பினர்கள் அடிக்கடி குறுக்கிட்டனர். இதனால் சிவலிங்கேகவுடா ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். அதைத்தொடர்ந்த மீண்டும் பேசிய சிவலிங்கேகவுடா, "பா.ஜனதா உறுப்பினர்கள் பேசும்போது நாங்கள் குறுக்கீடு செய்யவில்லை. உத்தரவாத திட்டங்களை கடுமையாக விமர்சித்தனர். நாங்கள் அமைதியாக அதை கேட்டுக் கொண்டு இருந்தோம். ஆனால் நாங்கள் பேசும்போது மட்டும் பா.ஜனதாவினர் குறுக்கீடு செய்வது ஏன்?. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அன்ன பாக்ய திட்டத்திற்கு கூடுதல் அரிசி வழங்க மறுத்த மத்திய அரசின் செயலை மக்களிடம் கொண்டு செல்வோம்" என்றார்.