இந்திய வரலாற்றில் ஈடு, இணையற்ற பங்காற்றிய நேதாஜியை நினைவுகூர்வோம்; பிரதமர் மோடி
|இந்திய வரலாற்றில் காலனி ஆட்சிக்கு எதிராக கடுமையாக போராடி, ஈடு, இணையற்ற பங்காற்றிய நேதாஜியை நினைவுகூர்வோம் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 126-வது ஆண்டு பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஜனவரி 23-ந்தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த ஆண்டில் மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு, நாட்டின் உயரிய பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் மோடி சூட்டுகிறார்.
இதனையொட்டி பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இன்று பராக்கிரம தினத்தில், நேதாஜி சுபாஸ் சந்திர போசுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். இந்திய வரலாற்றில் ஈடு, இணையற்ற பங்காற்றிய அவரது பணியை நாம் நினைவுகூர்வோம்.
காலனி ஆட்சிக்கு எதிராக, கடுமையாக போராடியதற்காக அவர் நினைவில் கொள்ளப்படுவார். ஆழ்ந்த தாக்கம் ஏற்படுத்தியுள்ள அவரது எண்ணங்களுடன், இந்தியாவுக்கான அவரது தொலைநோக்கு பார்வையை மெய்ப்பிக்கும் வகையில் நாம் பணியாற்றி வருகிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.