< Back
தேசிய செய்திகள்
மராட்டியத்தில் நடக்கும் அரசியல் விளையாட்டை மக்கள் பொறுத்து கொள்ள மாட்டார்கள் - சஞ்சய் ராவத் டுவீட்
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் நடக்கும் அரசியல் விளையாட்டை மக்கள் பொறுத்து கொள்ள மாட்டார்கள் - சஞ்சய் ராவத் டுவீட்

தினத்தந்தி
|
2 July 2023 3:33 PM IST

மராட்டியத்தில் நடக்கும் அரசியல் விளையாட்டை மக்கள் நீண்ட காலம் பொறுத்து கொள்ள மாட்டார்கள் என்று சஞ்சய் ராவத் பதிவிட்டுள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் சிவசேனா மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக ஏக்நாத்ஷிண்டே உள்ளார். இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மராட்டிய எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவார் இன்று தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 9 பேருடன் மராட்டிய கவர்னரை சந்தித்தார்.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அஜித் பவார் இணைந்துள்ளார். மராட்டிய துணை முதல் மந்திரியாக அஜித் பவார் பதவியேற்றார். அவருடன் தேசிய வாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எட்டு பேர் மந்திரிகளாக பதவியேற்றனர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவிற்கு அதிக முக்கியத்துவம் வாய்ப்பு கொடுக்கப்பட்டதால் அஜித் பவார் அதிருப்தியில் இருந்தார். அண்மையில் கட்சியின் செயல் தலைவர் பொறுப்பில் சுப்ரியா சுலே நியமனம் செய்யட்டார். இதனால், கடும் அதிருப்தி அடைந்த அஜித் பவார் ஆளும் சிவசேனா- பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார்.

இந்த நிலையில் பாஜக கூட்டணியில் அஜித் பவார் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ளது தொடர்பாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் டுவீட் செய்துள்ளார். அந்தப் பதிவில் அவர், "மராட்டிய அரசியலை 'சுத்தப்படுத்தும்' பணியை சிலர் கையில் எடுத்துள்ளனர், அவர்கள் வழிக்கு வரட்டும்.

நான் சரத் பவாருடன் இப்போதுதான் பேசினேன். அவர், நான் வலிமையானவன். எங்களுக்கு மக்கள் ஆதரவு உள்ளது. உத்தவ் தாக்கரே மூலம் அனைத்தையும் மீண்டும் உருவாக்குவோம். ஆம், இந்த விளையாட்டை மக்கள் நீண்ட காலம் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று மராத்தியில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்