ஒரே பாலின ஜோடி திருமண பிரச்சினையை நாடாளுமன்றத்திடம் விட்டு விடுங்கள் - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்
|ஒரே பாலின ஜோடி திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் விவகாரத்தை நாடாளுமன்றத்திடம் விட்டுவிடுங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதிட்டது.
புதுடெல்லி,
ஒரே பாலின ஜோடிகள், தங்கள் திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்கக்கோரி, பல்வேறு கோர்ட்டுகளில் மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.
அவற்றை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு விசாரித்து வருகிறது. மனுதாரர்கள் தரப்பு வாதம் முடிந்தநிலையில், மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நேற்று வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
160 உட்பிரிவுகள் மறுஆய்வு
திருமணம் என்பது சமூக-சட்டரீதியான நிகழ்வு. அதற்கு அங்கீகாரம் அளிப்பது, சட்டரீதியான கொள்கை முடிவுக்கு உட்பட்டது.
சிறப்பு திருமண சட்டம் என்றால் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான திருமணத்தை அங்கீகரிப்பது ஆகும். ஆனால், ஒரே பாலினத்தவரின் திருமணத்தை அங்கீகரிப்பது என்றால், அதற்கு பல்வேறு சட்டங்களில் உள்ள 160 உட்பிரிவுகளை மறுஆய்வு செய்ய வேண்டி இருக்கும்.
மிகவும் ஆழ்ந்த சமூக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மிகவும் சிக்கலான பிரச்சினையை சுப்ரீம் கோர்ட்டு கையாண்டு வருகிறது. இப்பிரச்சினை, சமூகத்தின் மீது மட்டுமல்லாமல் சட்டங்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுகுறித்து சமூகத்திலும், மாநில சட்டசபைகளிலும், சிவில் சமூக குழுக்களிலும் விவாதம் நடத்தப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்திடம் விட்டுவிடுங்கள்
எனவே, இந்த வழக்கில், மனுதாரர்கள் எழுப்பிய கோரிக்கைகளை எல்லாம் நாடாளுமன்றத்திடம் விட்டுவிடுவதை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நாடாளுமன்றத்துக்கு கூட இது மிகப்பெரிய வேலையாக இருக்கும். இதை ஆய்வு செய்யக்கூடிய அதிகாரமோ, வாய்ப்புகளோ நீதித்துறைக்கு இல்லை. எனவே, இப்பிரச்சினையை விசாரிப்பதை நிறுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம்.
நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை நீதித்துறை பறித்துக்கொள்ள முடியாது.
திருமணம் என்பது இரு தனிநபர் சார்ந்தது என்றாலும், வயது, விவாகரத்து போன்றவற்றை முடிவு செய்ய நாடாளுமன்றம், சட்டசபைகள் தலையிட வேண்டி உள்ளது என்று அவர் வாதிட்டார்.