ஆதார் கார்டு தொலைப்பவர்கள், வீட்டு உரிமையாளர்கள் மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்; கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் வேண்டுகோள்
|ஆதார் கார்டு தொலைப்பவர்கள், வீட்டு உரிமையாளர்கள் மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அலோக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பயங்கரவாதி கையில் ஆதார்
மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதி ஷாரிக், போலி ஆவணங்கள் மூலமே மைசூருவில் மோகன்குமார் என்பவரின் வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ளார். அதாவது துமகூரு ரெயில்வேயில் வேலை பார்த்து வரும் ஊழியர் பிரேம்ராஜ் என்பவர் உப்பள்ளியில் தவறவிட்ட ஆதார் கார்டில் பிரேம்ராஜ் படத்திற்கு பதிலாக தனது புகைப்படத்தை மாற்றி போலி ஆதார்கார்டு தயாரித்து வைத்திருந்தார்.
அதுபோல் மைசூரு செல்போன் பயிற்சி மையத்தில் பயிற்சிக்கு சேர்ந்திருந்தார். கோவையில் உள்ள தங்கும் விடுதியிலும் பல்லாரியை சேர்ந்த கவுரி அருண்குமார் என்பவர் தவறவிட்ட ஆதார் கார்டில் தனது படத்தை மாற்றி போலி ஆதார் கார்டு கொடுத்தே தங்கியிருந்துள்ளார். அத்துடன் ஊட்டியை சேர்ந்த சுரேந்திரன் என்ற ஆசிரியரின் ஆதார் கார்டு மூலம் சிம்கார்டு வாங்கியதும் தெரியவந்துள்ளது.
பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்
இவ்வாறு போலி ஆதார்கார்டுகள், ஆவணங்கள் மூலமே ஷாரிக் பயங்கரவாத செயலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் மங்களூருவில் நடந்த குக்கர் வெடி குண்டு சம்பவம் மூலம் நாம் அனைவரும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
பொதுமக்கள் வைத்திருக்கும் ஆதார் அடையாள அட்டையை பயங்கரவாதிகள், சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்தி கொள்ள ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இதனை மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையை காணாமல் போய் விட்டாலோ அல்லது திருட்டுப்போய் விட்டாலோ எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆதார் கார்டு காணாமல் போனது குறித்து உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அதே நேரத்தில் ஆதார் அடையாள அட்டையை இணையதளத்தில் சென்று பொதுமக்கள் லாக் செய்யும் அன்லாக் செய்யவும் கற்றுக் கொள்ள முடியும்.
இதன்மூலம் பொதுமக்களின் ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்தி போலி சிம் கார்டுகள் வாங்குவதை தவிர்க்க முடியும். குறிப்பாக ஆதார் அடையாள அட்டை பற்றிய தகவல்கள் பயங்கரவாதிகளின் கைக்கு கிடைக்காதபடி பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டு உரிமையாளர்கள் தங்களது வீடுகளை வாடகைக்கு கொடுக்கும் போது, வாடகைக்கு வருபவர்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்வதும் அவசியமாகும். அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வது அவசியமானதாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.