ராஜஸ்தான் கிராமங்களை அச்சுறுத்தும் சிறுத்தை - 2 வாரங்களில் 7 பேர் பலி
|ராஜஸ்தானில் சிறுத்தை தாக்குதலால் கடந்த 2 வாரங்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே வனப்பகுதியில் இருந்து தப்பி வந்த சிறுத்தை ஒன்று கடந்த சில நாட்களாக அங்குள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சிறுத்தை தாக்குதலால் கடந்த 2 வாரங்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுத்தையை பிடிக்க வனத்துறை, காவல்துறை மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த சுமார் 100 பேர் கொண்ட குழுவினர் இரவு, பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தையை பார்த்தை இடத்தில் சுடுவதற்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
பொதுமக்கள் தனியாக வெளியே செல்ல வேண்டாம் எனவும், அவசர தேவை ஏற்பட்டால் குழுவாக செல்ல வேண்டும் எனவும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் நடந்து செல்லும்போது குச்சியால் தரையில் தட்டி சத்தம் எழுப்பி கொண்டே செல்ல வேண்டும், கழிவறைகள் வீட்டிற்கு வெளியே இருந்தால் அதன் கதவுகளை திறந்து வைக்க கூடாது எனவும் வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.