பெங்களூருவில் சிறுத்தையால் மக்கள் அச்சம்.. அதிவிரைவு படை அமைக்க அரசு உத்தரவு
|வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த சிறுத்தைகள், பெங்களூரு புறநகர் மற்றும் மலை அடிவாரங்களில் காணப்படுகின்றன.
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தால் காட்டில் வாழும் விலங்குகள் உணவு தேடி வனப்பகுதியை விட்டு நகரத்திற்குள் வருகின்றன.
சில நாட்களுக்கு முன் மக்கள் வாழும் பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தையை பிடிக்கும்போது சுட்டுக் கொன்றனர். இதை தொடர்ந்து, விலங்குகளை பிடித்து வனத்தில் விடுவதற்காக, அதிவிரைவுப் படையை உருவாக்கும்படி வனத்துறை மந்திரி ஈஸ்வர் தனது துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
தற்போது பெங்களூரு புறநகர் மற்றும் மலை அடிவாரங்களில் சிறுத்தைகள் காணப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அவற்றைப் பிடித்து பத்திரமாக வனப் பகுதிக்குள் அனுப்ப மந்திரி அறிவுறுத்தி உள்ளார்.
யானைகளை பிடிப்பதற்காக தற்போதுள்ள 5 அதிவிரைவுப் படைகள் தவிர, பன்னர்கட்டா மற்றும் ராமநகரில் தலா ஒன்று என கூடுதலாக இரண்டு படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
சிறுத்தையை பிடிக்கும் பணியில் இருப்பவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கவேண்டும் என்றும் ஒத்திகை பயிற்சிகள் கொடுத்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.