நக்சலைட்டு பாதிப்பு மிகுந்த மாநிலங்களின் பாதுகாப்பு நிலவரம் குறித்து அமித்ஷா ஆய்வு
|நக்சலைட்டு பாதிப்பு மிகுந்த மாநிலங்களின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆய்வு செய்தார்.
புதுடெல்லி,
நக்சலைட்டு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று ஆய்வு செய்தார்.
இந்த கூட்டத்தில் மராட்டியம், ஆந்திரா, ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர். இதைப்போல மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் பங்கேற்றார். ஒடிசா, பீகார், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்கள் சார்பில் மந்திரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் பல்வேறு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்று, மேற்படி மாநிலங்களின் பாதுகாப்பு நிலவரங்களை எடுத்துக்கூறினர்.
இந்த மாநிலங்களில் கடந்த 5 ஆண்டுகளாக இடதுசாரி பயங்கரவாதம் (நக்சலைட்டு) கணிசமாக குறைந்து உள்ளதாக அதிகாரிகள் எடுத்துக்கூறினர். குறிப்பாக இடதுசாரி பயங்கரவாதத்துக்கு எதிரான மத்திய அரசின் தேசிய கொள்கை மற்றும் செயல்திட்டத்தால் இது சாதிக்கப்பட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். 2010-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2022-ல் வன்முறை சம்பவங்கள் 77 சதவீதம் அளவுக்கு சரிந்திருப்பதாகவும், பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களின் மரணங்கள் 90 சதவீதம் அளவுக்கு குறைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
2004 முதல் 2014-ம் ஆண்டு வரை 17,679 பயங்கரவாத சம்பவங்கள் நடந்திருப்பதாகவும், இதில் 6,984 பேர் பலியாகி இருப்பதாகவும் உள்துறை அமைச்சக தரவுகள் கூறுகின்றன. இது 2014 முதல் 2023 (ஜூன் 15 வரை) 7,649 சம்பவங்கள், 2,020 மரணங்கள் என்ற வகையில் குறைந்திருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, நக்சலைட்டு பயங்கரவாதம் மனித குலத்தின் சாபக்கேடு எனவும், இதை வேரறுக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும் கூறினார்.
நக்சலைட்டு ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக கடந்த ஆண்டு மிகவும் குறைந்த தாக்குதல் சம்பவங்களே நிகழ்ந்திருப்பதாக கூறிய அவர், இன்னும் 2 ஆண்டுகளில் இத்தகைய இடதுசாரி பயங்கரவாதம் நாட்டில் இருந்து ஒட்டுமொத்தமாக துடைத்து எறியப்படும் என்றும் உறுதிபட தெரிவித்தார்.