< Back
தேசிய செய்திகள்
சகோதரர்களை ஏவி விட்டு... மனைவி பலாத்காரம், படுகொலை; வெளிச்சத்திற்கு வந்த கணவரின் வக்கிரம்
தேசிய செய்திகள்

சகோதரர்களை ஏவி விட்டு... மனைவி பலாத்காரம், படுகொலை; வெளிச்சத்திற்கு வந்த கணவரின் வக்கிரம்

தினத்தந்தி
|
24 Jan 2024 9:22 PM IST

இந்த கொலையை திட்டமிட்டு செயல்படுத்திய பெண்ணின் கணவர் துபாய் நாட்டில் வசித்து வருகிறார்.

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் பதேப்பூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் ஒன்றில் இருந்த தண்ணீர் தொட்டி ஒன்றில் நிர்வாண கோலத்தில் பெண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர், போலீசுக்கு தகவல் அளித்தனர்.

இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், ரோகித் லோதி, ராமசந்திரா என்ற புட்டு, சிவம் என்ற பஞ்சம் மற்றும் சோனு லோதி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். நங்கு லோதி என்ற 5-வது நபர் போலீசில் சிக்கவில்லை.

அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அந்த பெண் அவருடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அவரை திருவிழாவுக்கு போகலாம் என கூறி, குற்றவாளிகள் தனியாக அழைத்து சென்றனர். இதன்பின் கும்பலாக அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், அவருடைய முகம் அடையாளம் தெரிந்து விட கூடாது என்பதற்காக செங்கற்களை கொண்டு நசுக்கி உள்ளனர்.

இந்த திட்டத்திற்கு பின்புலத்தில் அந்த பெண்ணின் கணவரே இருந்துள்ளார். அந்த 4 பேரும் கணவரின் சகோதரர்கள் ஆவர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த சம்பவத்திற்காக பணபரிவர்த்தனையும் நடந்துள்ளது. பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட கடுமையான காயம் மற்றும் அதிக ரத்த போக்கு ஆகியவற்றால் அவர் மரணம் அடைந்து உள்ளார் என அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த கொலையை திட்டமிட்டு செயல்படுத்திய பெண்ணின் கணவர் துபாய் நாட்டில் வசித்து வருகிறார். அவரை கைது செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்