நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் நாளை ஆலோசனை கூட்டம்
|நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை இரு வெவ்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்துகின்றனர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த தொடரை ஆக்கபூர்வமாக நடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக அனைத்துக்கட்சி கூட்டங்களும் நடைபெற்றன.
இந்த தொடரில் 24 மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. எனினும், எதிர்க்கட்சிகளின் கூச்சல், குழப்பம் மற்றும் அமளியால் அவை நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்டு உள்ளது.
எரிபொருள், விலைவாசி உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி. உயர்வு பற்றி விவாதிக்க வேண்டும் என அவையில் உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து அமளியில் ஈடுபடும் உறுப்பினர்களால் அவை ஒத்தி வைக்கப்படும் சூழல் காணப்படுகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் தலைவருக்கான அலுவலகத்தில் நாளை காலை 9.30 மணி அளவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர். இதேபோன்று, காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை காலை 10.15 மணியளவில் காங்கிரஸ் அலுவலகத்தில் ஒன்று கூடி ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த உள்ளனர்.
இந்த சூழலில், காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜய் மேக்கன் கூறும்போது, நாடு முழுவதும் நாளையும் எங்களது சத்தியாகிரக போராட்டம் தொடரும். இந்த விவகாரங்களை மக்களிடம் நாங்கள் எடுத்து செல்வோம். டெல்லியில் எங்களது மத்திய அலுவலகத்தில் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை முன் 2-வது முறையாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று விசாரணைக்கு ஆஜரானார். காலை 11 மணி அளவில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்த சோனியா காந்தியிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அதேவேளை, சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை மேற்கொள்ளும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறை அலுவலகம் முன் குவிந்த காங்கிரசார் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களையும் எழுப்பினர்.
இந்நிலையில், 6 மணி நேர விசாரணைக்கு பிறகு டெல்லியில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் இருந்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி புறப்பட்டு சென்றார். நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டு உள்ளது.