பிரதமர் மோடியின் தாயார் மறைவு: கர்நாடக கவர்னர், முதல்-மந்திரி உள்பட தலைவர்கள் இரங்கல்
|பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு:
துக்கம் அடைந்தேன்
பிரதமர் மோடியின் தாயார் ஹிராபென் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பிரதமர் மோடியின் தாயார் இறந்த செய்தி கேட்டு துக்கம் அடைந்தேன். எனது இதயப்பூர்வமான அஞ்சலியை அவரது காலடியில் சமர்பிக்கிறேன். அவரது ஆத்மா அமைதி பெற வேண்டுகிறேன். பிரதமர் மோடி உள்பட குடும்பத்தினருக்கு இழப்பை தாங்கும் சக்தியை இறைவன் வழங்கட்டும். ஓம் சாந்தி" என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடியின் தாயார் ஹிராபென் மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகுந்த துக்கம் அடைந்தேன். தனது தாய் மீது பிரதமர் மோடி வெளிக்காட்டிய அன்பு, பாசம் விலை மதிப்பற்றது. அதே போல் தனது மகன் மீது ஹிராபென் காட்டிய அன்பை நாம் அனைவரும் பார்த்துள்ளோம். அவர்களின் தாய்-மகன் உறவு ஒட்டுமொத்த நாட்டிற்கே முன்மாதிரியானது.
முன்மாதிரி தாயாக...
அவர் எப்போதும் தனது மகனை பிரதமராகவோ அல்லது முதல்-மந்திரியாகவோ பார்க்கவில்லை. எப்போதும் மகனாகவே பார்த்தார். இது ஒரு தாயின் தாய்மையை காட்டுகிறது. தாயின் குணங்கள் அனைத்தையும் பிரதமர் மோடியிடம் பார்க்கிறோம். மகனுக்கு ஆற்றும் கடமையை அவர் தனது கடைசி வயதிலும் செய்ய தவறியது இல்லை. மோடி தன்னை பார்க்க வரும்போது அவருக்கு உணவு ஊட்டி மகிழ்ந்தார். தான் சேமித்த பணத்தையும் அவருக்கு கொடுத்தார்.
ஹிராபென் தாயின் கடமைகளை சரியாக ஆற்றி ஒரு முன்மாதிரி தாயாக இருக்கிறார். ஒரு முன்மாதிரி மகனாக பிரதமர் மோடி நாட்டிற்கு சேவையாற்றி வருகிறார். ஹிராபென் ஆத்மா அமைதி பெற இறைவனை வேண்டு
கிறேன். இந்த இழப்பை தாங்கும் பலத்தை பிரதமர் மோடி உள்பட அவரது குடும்பத்தினருக்கு இறைவன் வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
தேவேகவுடா
முன்னாள் பிரதமர் தேவேகவுடா தனது டுவிட்டரில், "பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். 100 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அவர் முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார். ஆனால் நமக்கு பலம் கொடுக்க ஒரு தாய் எப்போதும் நம்மை சுற்றி இருப்பார். பிரதமர் மோடிக்கு இந்த இழப்பை தாங்கும் பலத்தை இறைவன் கொடுப்பார். ஓம் சாந்தி" என்று குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு எனது ஆழ்ந்து அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆத்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தனது டுவிட்டர் பதிவில், "பெற்றோரின் இழப்பை வார்த்தைகளால் கூற முடியாது. பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.