செப்டம்பருக்கு தள்ளிப்போகிறதா எதிர்க்கட்சிகளின் கூட்டம்..?
|அடுத்த மாதம் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் செப்டம்பருக்கு தள்ளிப்போகிறதா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக 'இந்தியா' என்ற பெயரில் வலுவான அணியை எதிர்க்கட்சிகள் அமைத்து உள்ளன. இந்த அணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும் நடந்தது.
இதைத்தொடர்ந்து 3-வது கூட்டம் மும்பையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 25 மற்றும் 26-ந் தேதிகளில் நடைபெறும் என தகவல் வெளியானது. காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்த நிலையில் ஆகஸ்டு 25 மற்றும் 26-ந் தேதிகளில் கூட்டணியின் பல்வேறு தலைவர்களுக்கு பங்கேற்க முடியாத சூழல் உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக சரத்பவார் போன்ற முக்கிய தலைவர்கள் ஏற்கனவே திட்டமிட்ட அலுவல்களில் பங்கேற்பதால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என தெரிவித்து உள்ளனர். எனவே இந்த கூட்டம் தள்ளிவைக்கப்படுவதாக இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் தெரிவித்து உள்ளனர். இது செப்டம்பர் முதல் வாரத்தில் நடத்தப்படலாம் எனவும் அவர்கள் கூறினர்.