தேஜாஸ் எம்கே1ஏ போர் விமானம் வெற்றிகரமாக பறந்தது.. உற்பத்தியில் புதிய மைல்கல்
|இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் விமான தளத்தில் இருந்து விமானம் வெற்றிகரமாக புறப்பட்டு விண்ணில் பறந்தது.
பெங்களூரு:
இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்படும் உள்நாட்டு தயாரிப்பான தேஜாஸ் இலகுரக போர் விமானம், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது. அவ்வகையில், தேஜாஸ் எம்.கே.1ஏ என்ற பெயரில் நவீன அம்சங்களுடன் இலகுரக விமானத்தை இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இதன் முதல் விமானம் எல்.ஏ.5033 இன்று இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் விமான தளத்தில் இருந்து வெற்றிகரமாக புறப்பட்டு விண்ணில் பறந்தது. தலைமை பயிற்சி பைலட், குரூப் கேப்டன் கே.கே.வேணுகோபால் (ஓய்வு) விமானத்தை ஓட்டினார். 18 நிமிடங்கள் வானில் பறந்து வட்டமடித்து பின்னர் தரையிறக்கினார். இந்த சோதனையானது, போர் விமான உற்பத்தி செயல்முறையில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது
புவிசார் அரசியல் காரணிகளால் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் சவால்கள் இருந்தபோதிலும், ஒரே நேரத்தில் விமானத்தை வடிவமைத்து உற்பத்தி செய்வதற்கான முக்கிய மைல்கல்லை இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் அடைந்திருக்கிறது.
தேஜாஸ் எம்.கே.1ஏ விமானத்தில் மேம்பட்ட எலக்ட்ரானிக் ரேடார், தகவல் தொடர்பு அமைப்புகள், கூடுதல் தாக்குதல் திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு அம்சங்கள் உள்ளன. இதன்மூலம் விமானத்தின் ஒட்டுமொத்த செயல்திறன் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.