< Back
தேசிய செய்திகள்
மைசூருவில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
தேசிய செய்திகள்

மைசூருவில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

தினத்தந்தி
|
24 Sept 2023 12:15 AM IST

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று மைசூருவில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மைசூரு

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர்

கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் கர்நாடகத்தில் உள்ள ஏராளமான அணைகள் நிரம்பவில்லை. குறிப்பாக காவிரி படுகையில் உள்ள கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.), ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகள் நிரம்பவில்லை.

கபினி அணை மட்டும் நிரம்பி இருந்தது. இதற்கிடையே காவிரி படுகையில் உள்ள அணைகளில் போதுமான தண்ணீர் இல்லாத நிலையில், தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.

அதற்கு முன்னதாக காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதை ஏற்று காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டு வருகிறது.

சாலைமறியல்

இதற்கு கண்டனம் தெரிவித்து கன்னட அமைப்பினர், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து நேற்று மைசூருவில் வக்கீல்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வக்கீல்கள் அனைவரும் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டு, கோர்ட்டு முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

பின்னர் அவர்கள் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்தும், காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினர். காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

போக்குவரத்தை போலீசார் சீரமைத்தனர்

காவிரி விவகாரத்தில் தீர்ப்பு கூறும் முன்பு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி, கர்நாடகத்தில் உள்ள நீர் நிலைகளின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டும், அவர்கள் கர்நாடகத்திற்கு நேரில் வந்து இங்குள்ள நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

அணைகளில் உள்ள தற்போதைய நீரைக்கொண்டு கர்நாடக மக்களின் குடிநீர் தேவையை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கூறி கோஷமிட்டனர்.

மேலும் மத்திய அரசு, கர்நாடக மாநில அரசுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும், இதற்கு கர்நாடக எம்.பி.க்கள் 28 பேரும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறினர்.

வக்கீல்களின் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.

மேலும் செய்திகள்