< Back
தேசிய செய்திகள்
மீண்டும் காதலிக்கலாம் வா முன்னாள் காதலனை ஆசை வார்த்தை கூறி அழைத்த காதலி...!  பின்னர் நடந்த பகீர் சம்பவம்
தேசிய செய்திகள்

"மீண்டும் காதலிக்கலாம் வா" முன்னாள் காதலனை ஆசை வார்த்தை கூறி அழைத்த காதலி...! பின்னர் நடந்த பகீர் சம்பவம்

தினத்தந்தி
|
27 Dec 2023 7:13 PM IST

முன்னாள் காதலிதானே என்று சற்று உணர்ச்சி வசப்பட்ட ஷ்ரவன் காரை எடுத்துக் கொண்டு பார்க்கிற்கு பறந்துள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சட்டக் கல்லூரியில் சட்டம் படித்து வருபவர் ரிங்கி. அதே கல்லூரியைச் சேர்ந்தவர் ஷ்ரவன். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக ஆறு மாதங்களுக்கு முன் பிரிந்து சென்றனர்.

இதனையடுத்து முன்னாள் காதலனைப் பழி வாங்க நினைத்த ரிங்கி, ஷ்ரவனுக்கு பல வழிகளில் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவருடைய முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது.

இந்தநிலையில், ரிங்கி தனது முன்னாள் காதலன் ஷ்ரவனை தொடர்பு கொண்டு, "உன்னிடம் சிறிது நேரம் மனம் விட்டு பேச வேண்டும் வா" என்று ஐதராபாத்தில் உள்ள பார்க்கிற்கு அழைத்துள்ளார். முன்னாள் காதலிதானே என்று சற்று உணர்ச்சிவசப்பட்ட ஷ்ரவன் காரை எடுத்துக் கொண்டு பார்க்கிற்கு பறந்துள்ளார்.

பின்னர் பார்க்கில் இருவரும் சந்தித்து இனிக்க இனிக்க பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ரிங்கியின் நண்பர்கள் 5 பேர், ஷ்ரவன் வந்த காரில் 40 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலம் ஒன்றை வைத்து விட்டு ஓடிவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து அவர்களே, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரில் சோதனை செய்து அதிலிருந்த கஞ்சா பொட்டலத்தைப் பறிமுதல் செய்தனர். பின்னர் ஷ்ரவனை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில் ரிங்கிக்கும் தனக்கும் இடையே இருந்த காதல் விவகாரம் மற்றும் அவர்கள் பிரிந்து சென்ற காரணம், ரிங்கியின் செல்போன் அழைப்பு உள்ளிட்டவை குறித்து ஷ்ரவன் போலீசாரிடம் புட்டு புட்டு வைத்தார்.

இதனையடுத்து சந்தேகமடைந்த போலீசார், ராங்கியைக் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், காதலனைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஷ்ரவன் காரில் கஞ்சா பொட்டலம் வைத்ததை ரிங்கி ஒப்புக்கொண்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ரிங்கி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 5 நண்பர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சட்டக் கல்லூரி மாணவி தெலுங்கானா மாநில போலீஸ் அதிகாரி ஒருவரின் மகள் எனத் தெரியவந்துள்ளது.

காதலனைப் பழி வாங்க நினைத்து நண்பர்களுடன் சேர்ந்து சட்டக் கல்லூரி மாணவி கைது செய்யப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்