''கருத்து சுதந்திரம் இல்லை'' என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதிக்கு சட்ட மந்திரி கண்டனம்
|கருத்து சுதந்திரம் இல்லை என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதிக்கு சட்ட மந்திரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா, ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ''நாட்டில் நிலைமை மோசமாக உள்ளது. பிரதமரின் முகத்தை எனக்கு பிடிக்கவில்லை என்று நான் கூறினால், என் வீட்டில் சோதனை நடத்தி, என்னை கைது செய்து சிறையில் தள்ளி விடுவார்கள். அந்த அளவுக்கு கருத்து சுதந்திரமே இல்லாத நிலை காணப்படுகிறது'' என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில், இப்பேட்டியை மேற்கோள் காட்டி, மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
ஓய்வுபெற்ற நீதிபதி அப்படி சொல்லி இருந்தால், அது அவர் பணியாற்றிய அமைப்பை சிறுமைப்படுத்தும் செயல்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை எந்த நேரமும், எந்த கட்டுப்பாடும் இன்றி வசைபாடுபவர்கள், கருத்து சுதந்திரம் குறித்து கண்ணீர் வடிக்கிறார்கள். காங்கிரஸ் அமல்படுத்திய நெருக்கடி நிலை பற்றி அவர்கள் பேசுவது இல்லை. சில மாநில கட்சி முதல்-மந்திரிகளை விமர்சிக்க துணிச்சலும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.