பெங்களூரு தரைக்கட்டுப்பாட்டு மையத்துடன் லேண்டர் தொடர்பு வெற்றி - இஸ்ரோ
|பெங்களூரு தரைக்கட்டுப்பாட்டு மையத்துடன் லேண்டர் தொடர்பு வெற்றி அடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா,
நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்குவதில் இன்று வெற்றியடைந்து வரலாறு சாதனை படைத்துள்ளது.
தொடர்ந்து, நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் இஸ்ரோவுக்கு தனது முதல் தகவலை அனுப்பி உள்ளது. அதில், இந்தியா, இலக்கை நான் அடைந்து விட்டேன். நீங்களும் கூட! என்று தெரிவித்து உள்ளது. இதனால், இது ஒரு மறக்க முடியாத தருணம் என்று பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். அவர்கள் வந்தே மாதரம் என்று கோஷங்களை எழுப்பினர்.
இந்த நிலையில், சந்திரயான் 3 லேண்டருடன் பெங்களூரு தரைக்கட்டுப்பாட்டு மையத்துடன் தொலை தொடர்பு நிறுவுதல் வெற்றி அடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும் லேண்டரின் கிடைமட்ட வேகக் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. தரையிறங்கும்போது நிலவின் மேற்பரப்பு படங்களை லேண்டர் எடுத்துள்ளது.