கர்நாடகத்தில் நில வழிகாட்டி மதிப்பு 30 சதவீதம் உயர்கிறது
|கர்நாடகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் நில வழிகாட்டி மதிப்பு 30 சதவீதம் உயருவதாக வருவாய்த்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா கூறியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் நில வழிகாட்டி மதிப்பு 30 சதவீதம் உயருவதாக வருவாய்த்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா கூறியுள்ளார்.
வருவாய்த்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
30 சதவீதம் உயருகிறது
கர்நாடகத்தில் நில பதிவு வழிகாட்டு மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மதிப்பு உயர்வு வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆண்டுதோறும் நில பதிவு வழிகாட்டு மதிப்பை உயர்த்த வேண்டும் என்று விதிமுறைகளில் உள்ளது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக நில மதிப்பை உயர்த்தவில்லை. அதனால் அரசு இந்த மதிப்பை உயர்த்துகிறது. இது எல்லா இடங்களில் அமலுக்கு வராது. எங்கெங்கு சந்தை மதிப்பை விட வழிகாட்டு மதிப்பை அதிகமாக உள்ளதோ, அங்கு இந்த உத்தரவு செயல்படுத்தப்படாது.
ஆனால் சந்தை மதிப்பை விட வழிகாட்டு மதிப்பு மிக குறைவாக இருந்தால், அங்கு அதன் மதிப்பு உயரும். நெடுஞ்சாலை, விமான நிலையம், தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ள பகுதிகளில் வழிகாட்டு மதிப்பு குறைவாக உள்ளது. அந்த பகுதிகளில் நில வழிகாட்டி மதிப்பு உயரும். சராசரியாக நில வழிகாட்டி மதிப்பு 30 சதவீதம் உயருகிறது.
நில வழிகாட்டி மதிப்பு
இதுகுறித்து ஆட்சேபனை தெரிவிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இறுதியாக அரசாணை பிறப்பிக்கப்படும். இந்த நில வழிகாட்டி மதிப்பு உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். இந்த உத்தரவு அமலுக்கு வந்த பிறகு சிறிது குளறுபடிகள் ஆகும். இந்த குளறுபடிகள் 2 மாதங்களில் சரிசெய்யப்படும். சொத்துக்கள் விற்பனை செய்வதில் கருப்பு பணம் பரிமாற்றம் நடைபெறுவதாக புகார்கள் உள்ளன. அவற்றை தடுக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு கிருஷ்ண பைரேகவுடா கூறினார்.